Breaking
Wed. Apr 24th, 2024

கொவிட் 19 தொற்றினால் இறந்த உடல்கள் சம்பந்தமாக புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதில் இருந்து முழு உலகமும் சொல்லொணா துயரத்துக்குள்ளாகியது. இலங்கையும் அதற்கு விதிவிலக்காய் இருக்கவில்லை. என்றாலும் வைரஸ் முதல் அலையை சிறப்பாகக் கையாண்டு, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அரசாங்கம் , முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நிர்ப்பந்தமாக தகனம் செய்து, முஸ்லிம்கள் மத்தியில் மேலதிக பீதியை ஏற்படுத்தியது வருந்தத்தக்கது.

முதலாவது வைரஸ் அலையை சிறப்பாகக் கையாண்ட இலங்கை அரசு, உலகத்தின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றுக்கொள்வதை ஜனாஸா எரிப்பு விவகாரம் தடுத்துவிட்டது வேதனைக்குரியது.

நாட்டுக்கு ஏற்படும் அவமானத்தை முஸ்லிம் சமூகம் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.

எனினும், தவிர்க்க முடியாத கட்டத்தில்தான் எதிர்ப்புகளை வெளிக்காட்டினர். அவை அத்தனையும் ஜனநாயக மற்றும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நடந்தன. பொலிஸாரும் தங்கள் கடமையை சிறப்பாகச் செய்து, அசம்பாவிதம் நடந்துவிடாமல் கண்காணித்து உதவினார்கள். அதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த இக்கட்டான கட்டத்திலும் எந்தவித அசம்பாவிதங்களிலும் ஈடுபடாமல், இலங்கை முஸ்லிம்கள் பொறுமை காத்தமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, துறைசார் நிபுணர்கள் குழுவால் சிபாரிசு செய்யப்பட்ட பிரகாரம், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும். கொரோனா பரவலை முற்றாக தடுக்க வேண்டுமாயின் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் அவசியமானது.

அந்தவகையில், முஸ்லிம் மக்களின் மனதில் உள்ள எரியூட்டல் பீதியை நீக்க, அவசரமாக கொவிட்19 தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நிபுணர் குழுவின் பரிந்துரைக்கமைய அடக்கம் செய்ய, அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்று முஸ்லிம் சமூகத்தின் சார்பாக கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Post