Breaking
Sat. Apr 20th, 2024

பன்முக ஆளுமை கொண்ட புத்தளத்தின் பொக்கிஷம்  அல்-ஹாஜ் அப்துல் லதீப் ஆசிரியரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அன்னார் சிறந்த மனித நேயம் கொண்டவராகவும் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராகவும் விளங்கினார். நல்லாசிரியராக, பன்னூலாசிரியராக, சிறந்த ஊடகவியலாளராக, கவிஞராக இன்னும் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்திருந்த அன்னாரின் மறைவு புத்தளம் மண்ணுக்கு பேரிழப்பாகும்.

இவர் சமூகத்திற்காக பல நூல்களை வெளியிட்டுள்ளார். தமது ஒய்வு காலங்களை தகவல்களைத் தேடி, அதன்மூலம் பல்வேறு ஆக்கங்களை வெளிக்கொணர்ந்தவர். இவர் எழுதிய நூல்களில் “புத்தளம் மன்னார் பாதையும் வரலாற்று பயணங்களும்” என்ற நூலானது மிகவும் காத்திரமானதும் முக்கியமானதும் ஆகும். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர், ஆவணப்படுத்தல் குறைந்திருந்த காலகட்டத்தில், மேற்கூறப்பட்ட நூலினை எழுதி, நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் பல சரித்திரச் சான்றுகளை வெளிப்படுத்தியவர். இவரது சுயநலம் பாராத சமூகசேவையின் உச்சவெளிப்பாட்டுக்கு இது ஒரு சான்று.

அதுமாத்திரமின்றி, 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு, புத்தளத்துக்கு வந்த அபலை அகதிகளை அரவணைத்து, அவர்களுக்கு வாழ்விட வசதிகளை செய்து கொடுப்பதில் அன்னாரின் பங்களிப்பினை, நாம் இன்றும் நினைத்துப் பார்க்கின்றோம்.

புத்தளத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டு வந்த மர்ஹூம் கலாபூசணம் அப்துல் லதீப் ஆசிரியரின் மறைவானது, புத்தளம் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் எழுத்துலகுக்கும் பாரிய இழப்பாகும்.

இத்தருணத்தில், அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன், அன்னாரது  இழப்பால் கவலையடைந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தளம் மக்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

Related Post