Breaking
Tue. Apr 16th, 2024

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்

மர்ஹூம் கலாநிதி சுக்ரியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கலாநிதி சுக்ரியின் மறைவு சமூகத்துக்கு பேரிழப்பாகும். அதுவும் தற்போது சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான இக் காலகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகும்.

மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம் அறிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராகவும், பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியவர். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் அவர் மிகவும் காத்திரமான பங்களிப்பை நல்கியிருக்கிறார்.

தீஞ்சுவை சொட்டும் நல்ல பேச்சாளரான இவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர். மொத்தத்தில் இவர் ஒரு அறிவுக்கடல் என்று கூறுவது மிகையாகாது. சமய இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமின்றி, பிறநாட்டு சஞ்சிகை பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அதுமாத்திரமின்றி, பல்வேறு சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் ஆங்கிலத்தில் பல்வேறு ஆக்கங்களை தந்த பெருமகன் இவர்.

கலாநிதி சுக்ரியின் தனிச்சிறப்பு எந்த இயக்கத்தையும் சாராமல் இருந்து, இயக்கச் சாயம் எதுவுமே இல்லாது, அவரது கருத்துக்களை எல்லா தரப்பினரும் ஈர்க்கும் வகையில் செயலாற்றியதேயாகும்.

அன்னாரிடம் இஸ்லாமிய எழுச்சி குறித்த தெளிவான பார்வையும் தூரநோக்கும் இருந்தது. இலங்கையில் காணப்படும் முன்னோடி இஸ்லாமிய பல்கலைக்கழகமான பேருவளை ஜாமிஆ நளீமியாவில் பணிப்பாளராக, இறுதி வரை பணியாற்றிய இவர், இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு வித்திட்டவர். அவரது மாணாக்கர்கள் இன்று சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் மிளிர்ந்து வகிக்கின்றனர்.

ஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகத் தலைவரும் கொடைவள்ளலுமான மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். அத்துடன் முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த நளீம் ஹாஜியாருடன் இணைந்து அரும்பாடுபட்டவர். அதுமாத்திரமின்றி, இலங்கை முழுவதிலுமுள்ள வறிய மாணவர்களின் கல்விக்காக, நளீம் ஹாஜியாரின் புலமைப்பரிசில் திட்டத்தை சிறந்த முறையில், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியவர்களில் கலாநிதி சுக்ரியே முதன்மை வகிக்கின்றார். இந்த உதவித் திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து வெளியேறி தென்னிலங்கையில் வாழ்ந்த அகதி முஸ்லிம்கள் பெரும் நன்மை அடைந்தமையை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கின்றேன்.

அவரது பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

Related Post