Breaking
Tue. Apr 16th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், அவரை இன்னும் சில தினங்களில் கைது செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெறுவதாகவும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான  அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (13) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்திலே இருந்த முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை  குறைக்க வேண்டுமென்று தேசியத்தில் இருக்கின்ற, பௌத்தவாதத்தை தூண்டுகின்ற, அதற்குள் இருந்துகொண்டு முஸ்லிம்களுக்கு  எதிராக பிரச்சாரம் நடத்துகின்ற, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திக்காட்டுகின்ற தேவை அவர்களுக்கு இருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில், சஹ்ரானை வைத்து, பதினான்கு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்கள். தற்போது இந்த ஜனாதிபதி, பிரதமர் ஆட்சிக் காலத்தில் பெரும்பான்மை சமூகத்தினை திருப்திப்படுத்தவில்லை என்கின்ற பிரச்சனை உள்ளது. பல பொருட்களுக்கு விலைகளை குறைப்போம், மின்சார பட்டியலை குறைப்போம் என்று பட்டியலிட்டார்கள்.

ஆனால், இவர்கள் எதுவும் செய்துகாட்டவில்லை என்பதனால், பெரும்பான்மை சமூகம் சற்று தளம்பல் நிலையில் உள்ளது என்று, இந்த ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்.

இந்த அரசாங்கம் சரியான முறையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கையாளாமையினால், எல்லாக் கட்சியினரும் இவர்களுக்கெதிராகவே பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலத்தில், சமூகத்துக்காக குரல் கொடுத்தவர்களை இல்லாமலாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குரல்வளையை நசுக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. எனவே, அவரை கைது செய்வதன் மூலம், இதனை சாதிக்க முடியும் என்றும், பெரும்பான்மை சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்த முடியும் எனவும், இவர்கள் திட்டமிட்டு காரியமாற்றுகின்றனர். இந்த விடயத்தில் இவர்கள் கங்கணங்கட்டி நிற்கின்றனர்” என்று கூறினார்.

 

 

Related Post