Breaking
Fri. Apr 26th, 2024

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர்.

எனவே, அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு ஆவன செய்யுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இந்த வாக்காளர்கள் அனைவரும் மீள்குடியேற்றத்துக்காக சொந்த மண்ணுக்குச் சென்று, தமது பூர்வீக பிரதேசங்களில் தங்களுக்கான கொட்டில்களையோ அல்லது தற்காலிக இருப்பிடங்களை அமைத்த பிறகு, அங்கு  கல்வி, சுகாதார, வர்த்தக நடவடிக்கைகளில் குறைபாடு இருந்ததினால் அல்லது இருப்பதற்கு ஒழுங்கான வீடுகள் இல்லாத காரணத்தினால், மீள்குடியேறிய இடங்களிலிருந்து தற்காலிகமாக மீண்டும் புத்தளத்துக்கு வந்திருக்கின்றனர்.

இவர்கள், மீள்குடியேறிய பிரதேசங்களில் உரிய வசதிகள் கிடைத்தவுடன் மீண்டும் அங்கு செல்வதற்கு விருப்பத்துடன் இருக்கின்றனர். அவ்வாறு ஆர்வத்துடன் இருக்கின்றவர்களின் வாக்குப் பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

இவ்வாறு வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டின் பிரஜை ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் இருப்பதற்காக, சொந்த மாவட்டத்திலுள்ள வாக்காளர் இடாப்பை மாற்ற முடியாது. கொழும்பில் வசிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மெதமுலானையில் வாக்களிக்கிறார். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அத்தனகல்ல மற்றும் பொலனறுவையிலேயே வாக்களிக்கின்றனர். அவர்களுக்கு இவ்வாறான வசதிக்க;லை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றால் ஏன் பலானதமாக வெளியேற்றப்பட்டு, புத்தளத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு ஏன் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.

எனவே, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரால் வாக்களிப்பதற்கு தடுக்கப்பட்ட 7727 வாக்காளர்களையும், அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் இடாப்பில் மீளப் பதிவு செய்து, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.

எனவே, இவ்வாறு தடுக்கப்பட்ட மன்னார் பிரதேச சபை 2618, முசலி பிரதேச சபை 3452, மாந்தை மேற்கு பிரதேச சபை 1217, நானாட்டான் பிரதேச சபை 457, மன்னார் பிரதேச சபை 342 வாக்காளர்களையும் சொந்த மாவட்டத்தில் வாக்களிக்க ஆவன செய்யுமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.

Related Post