Breaking
Fri. Apr 19th, 2024

அப்துல்லாஹ்

மரணிக்கும் வரையிலும் கல்வியைப் பற்றிப் பேசுகின்ற ஒரு அரசியல்வாதியாக நான் இருக்க ஆசைப்டுகின்றேன் என வீடமைப்பு மற்றும் சமூர்த்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் இன்று  இடம்பெற்ற கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 35 மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப் பரிசில் நிதியை வழங்கி வைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து அங்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் பேசிய அவர்,

“கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கல்வியைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும்.
கல்விதான் ஒரு சமூகத்தை எழுச்சி பெறச் செய்யும் ஆயுதமாக இருப்பதால் இந்த மாற்றம் வரவேற்கத் தக்கது.

கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு இந்த மாவட்டத்திலே வாழ்கின்ற எல்லா சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்று நான் அவாக் கொண்டுள்ளேன்.

கல்வியின் மகிமையைப் பற்றி நான் அறிந்து கொண்டதால்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலே மத்திய கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நான் குரல் கொடுத்து இன்று அந்தக் கனவு நனவாகி இப்பொழுது இலங்கையில், கல்வித் தரத்தில் முதலாவது வலயம் என்ற பெருமையை மட்டக்களப்பு மத்தி வலயம் கடந்த 4 வருடங்களாகத் தக்க வைத்துக் கொண்டு வருகின்றது.

இந்த மாவட்டத்திலே வாழ்கின்ற மக்களின் ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தபட்சம் ஒரு பட்டதாரியாவது இருக்க வேண்டும் என்று நான் எடுத்துக் கொண்ட பிரக்ஞையும், வேணவாவும் இன்று நிறைவேறி நிற்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையிலிருந்து துறைநீலாவணை வரையும் தமிழ் முஸ்லிம் என்ற பேதமில்லாது 1117 பட்டதாரிகள் கடந்த நியமனத்தின்போது நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றினார்கள்.

இது எல்லா மாவட்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட மிகவும் அதிகமானதாகும்.
கல்வியிலே இந்த துரித கதி வளர்ச்சி எப்படி நடந்தது என்று அதிகாரிகள் இன்னும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வளர்ச்சிகூடக் காணாது இன்னும் கல்வியில் நாம் உயர்ச்சி காண வேண்டும் என்று நான் அவாக் கொண்டு இரவும் பகலும் அதற்கான சிந்தனைகளில் மூழ்கியிருக்கின்றேன்.

இந்த மாவட்டத்திலே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நான் எனது சொந்தப் பணத்திலே 38 இலட்சம் ரூபாய்களை செலவழித்திருக்கின்றேன்.

அரசியல் வாதி என்கின்ற பெயருக்கு அப்பால் நின்று எனது மரணக்குழிக்கு சாட்சியாகவே நான் இவ்வாறு கல்விக்காக தியாகம் செய்து வருகின்றேன்.

சில அரசியல் வாதிகள் வறுமையில் உழலும் மக்களை தொடர்ந்தும் வறியவர்களாகவே வைத்திருக்க விரும்புகின்றார்கள். நான் அவ்வாறல்ல அத்தகைய கயவர்களிலிருந்து வேறுபட்டவன்.

அமைச்சர் சஜித் பிறேமதாஸ தனது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமுல்படுத்தும் அத்தனை அபிவிருத்திகளையும் இங்கும் அமுலாக்க வேண்டும் என்ற எனது வேண்டு கோளின் அடிப்படையிலேதான் இப்பொழுது இந்த மாவட்டத்திலே இத்தகைய கல்விப் புலமைப் பரிசில் உதவிகளும், மாணவர்களின் குடும்பங்களுக்கு சுயதொழில் கடனுதவிகளும் கிடைத்து வருகின்றன” என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர், கொழும்பு தலைமைக் காரியாலய சமூர்த்தி வேலைத் திட்டங்களுக்கான இணைப்பாளர் ஐ. அலியார், சமூர்த்தித் திட்ட மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் பி. குணரெட்ணம், ஏறாவூர் நகர பிதா எம்.ஐ.எம். தஸ்லிம், செயலாளர் எம்.எச்;.எம். ஹமீம், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபைச் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை, பிரதேச சமூர்தித் திட்ட முகாமையாளர் எம்.ஐ.எம். இஷ்ஹாக் உட்பட பயனாளிகளான மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உயர்தரத்தில் கற்கும் 35 மாணவர்களுக்கு மொத்தமாக 16 ஆயிரம் ரூபா உடனடியாக வழங்கப்பட்டதுடன் மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு மிகுதித் தொகை மாதாந்தம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *