Breaking
Wed. Apr 24th, 2024

மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களிலும் ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிடும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து தமது நன்றிக் கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும்’ என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார்.
மதினாபுரம், சேகுமலைச் சோலையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பில் சேகு இஸத்தீன் மேலும் கூறியதாவது:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் முஸ்லிம் துவேஷ ஆட்சி காரணமாக, முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனையடைந்து மகிந்தவுக்கு வாக்களிப்பதற்கு இஷ்டமில்லாதிருந்தனர். மகிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்தனர். 2012 தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்திலிருந்து தொடங்கி 2014 ஜூன் 15 அளுத்கமை அட்டூழியங்களில் உக்கிரமடைந்த மகிந்த ஆட்சியின் முஸ்லிம் துவேஷ காட்டுத்தர்பாருக்கு சாவு மணி அடிக்க வேண்டுமென்பதில் முஸ்லிம்களுக்கிடையே இரண்டு அபிப்பிராயங்கள் இருக்கவில்லை. ஆயினும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கவலையோடுதான் முஸ்லிம்களின் நாட்கள் கழிந்தன.

முஸ்லிம்களின் மன உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து அவர்களது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒரு அரசியல் தலைமை இல்லாதிருந்த நேரத்தில்தான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மகிந்தவின் முஸ்லிம் துவேஷக் கோட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறினார்.

தனது பட்டம், பதவிகள் பறிபோகும் என்;று பதட்டப்படாமல் தன் உயிர்மீதான அச்சுறுத்தல்களை உதாசீனம் செய்து முஸ்லிம்களின் மன உணர்வுகளை மதித்து, கௌரவித்து, முஸ்லிம்களின் அமைதி, பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு முடிவைத் தெரிந்து கொண்டு மகிந்தவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, ஐ.தே.கட்சியுடன் நல்லாட்சிக்கான பொது எதிரணியில், மைத்திரியை கொண்டு மகிந்தவை மாற்றிவிட மும்மூரமாக உழைக்கத் தொடங்கினார்.

றிஷாத் பதியுதீனின் தீர்மானமும், துணிவும், வெளியேற்றமும் முஸ்லிம்களுக்குப் பெரும் திருப்தியாயும், ஆறுதலாயும் அமைந்தன. றிஷாத் பதியுதீனுக்காக முஸ்லிம்கள் இறைவனிடம் பிரார்த்திக்கவும் செய்தனர். முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு புதுயுகம் பிறக்கப்போவதை நம்பினர்.

றிஷாத் பதியுதீனின் தீவிரமும், துணிவும் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு ஒரு உந்துகோலாய் இருந்தது. ‘முஸ்லிம்களுடைய பாதுகாப்புக்கு அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக மகிந்ததான்’ என்று கூறித்திரிந்த ஐந்தாம் வேதக்கார முஸ்லிம் காங்கிரஸூக்கு றிஷாட்டின் படையெடுப்பு தொடை நடுங்கச் செய்தது.

றிஷாத் பதியுதீனின் இந்த அதிரடி நடவடிக்கையால் அத்திவாரமே ஆட்டம் கண்ட முஸ்லிம் காங்கிரஸூக்கு றிஷாத் பதியுதீனைப் பின்பற்றி முஸ்லிம்களின் மன உணர்வுகளைக் கௌரவித்து மகிந்தவை விட்டும் வெளியேறாது விட்டால் அடுத்த தேர்தலில் முஸ்லிம்களின் முகத்தில் முழிக்க முடியாமல்போவதுடன் தமது பட்டம் பதவிகளையும் இழக்க நேரிடும் என்ற பதற்றம் ஒருபுறமிருந்தது.

மறபுறத்தில் மகிந்தவை விட்டு வெளியேறினால் மகிந்த தரப்பால் ஏற்படச் சாத்தியமான பயம் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த மீண்டும் வெற்றியடைந்தால் அதற்குப்பிறகு அமைச்சுப் பதவிக்கு அதோ கதிதான் என்பதுவும் முஸ்லிம் காரங்கிரஸை அலைக்கழிய வைத்தது.

நாளுக்கு நாள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு அதிகரித்து வந்ததும், கிழக்கு முஸ்லிம்கள் பல இடங்களில் றிஷாத் பதியுதீனை தோளில் சுமந்து ஊர்வலம் வந்து ‘எங்கள் தேசியத் தலைவனே’ என்று கொண்டாடியதும் முஸ்லிம் காங்கிரஸூக்குப் பெருத்த பிரச்சினையாய் அமைந்தது. முஸ்லிம்களுக்காக இல்லாவிட்டாலும் தமது அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லாமல்,
தமது அமைச்சுக் கடித இதழிலேயே ‘இந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவே வெற்றிபெற அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்’ என்று எழுதி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி மேடைக்கு மேடை மகிந்தவையும் அந்தப்பிரார்த்தனையை முஸ்லிம்களுக்குச் சொல்ல வைத்து இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸூம் வேறுவழியின்றி மகிந்தவை விட்டும் வெளியேறியது.

இந்த முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதற்கும் இதன்பின் வெளியேறிய முஸ்லிம் தலைவர்களுக்கும் வழிகாட்டிய தலைவன் றிஷாத் பதியுதீன்தான்.
முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மகிந்தவை எதிர்த்து மைத்திரிக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தனர்.

மிகுதி மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் -சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் சுமப்பது ஆபத்தாக முடியலாம் என்று மகிந்தவைப் பகிரங்கமாக எதிர்க்காதும், மைத்திரியை ஆதரிக்காதும் இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் றிஷாத் பதியுதீன் ‘எனது உம்மத்துக்களின் நலனைப்பற்றி சிந்திக்காதவன், என் சமூகத்தைச் சார்;ந்தவனில்லை’ என்ற நபி மொழியைத் தூக்கிப்பிடித்து அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆத்ம பலத்தை ஏற்;படுத்தி மைத்திரியை வெல்லச் செய்யப் பாடுபட்டார்.

றிஷாத் பதியுதீனின் இந்த தூரதிருஷ்டியான, துணிச்சலான நடவடிக்கையினால் தீர்மானம் எடுக்கத் தயங்கிக்கொண்டிருந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களும் மைத்திரிக்கு வாக்களித்து மைத்திரியின் வெற்றியில் முழு முஸ்லிம் சமூகமுமே பங்காளிகளாகிக் கொண்டது.

28.07.2015 செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார மொத்த விற்பனை நிலையத்துக்குப் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உரையாற்றும்போது ‘நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெற்றிக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஒரு முக்கிய காரணம்’ என்று பேசி அவரது திறமைகளைப் பாராட்டினார்.

ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்த இந்த றிஷாத் பதியுதீனுக்கு முஸ்லிம்கள் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளனர்.
றிஷாத் வெளியேறாது இருந்திருந்தால் முஸ்லிம் காங்கிரஸ ஒருபோதும் வெளியேறி இருக்காது. மகிந்தவே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீடிப்பதற்கும், மகிந்த மூன்றாம் தரம் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கும் மந்திரிப் பதவிக்களுக்காக 18வது அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற உதவிய முஸ்லிம் காங்கிரஸ், மகிந்த தோற்றுப்போவார் என்று தெரிந்ததும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மைத்திரிக்கு ஆதரவளிக்க முன்வந்ததே அல்லாமல் முஸ்லிம்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிததோ, அல்லது முஸ்லிம்கள் மீதான மகிந்த அரசின் இனத்துவேஷ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தோ அல்ல.

இன்று மைத்திரி ஜனாதிபதியாய் இருப்பதற்கும், ரணில் பிரதம மந்திரியாய் இருப்பதற்கும், ஐ.தே.கட்சி அரசாங்கம் அமைத்திருப்பதற்கும் றிஷாத் பதியுதீனின் வெளியேற்றம் காரணமாக முஸ்லிம்கள் மைத்திரிக்கு அளித்த சுமார் மூன்று இலட்சம் மேலதிக வாக்குகளே.

றிஷாத் காரணமாக இருந்த இந்த ஜனாதிபதி மாற்றத்துக்கும் வெற்றிக்கும் முஸ்லிம்கள் றிஷாட்டின் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பது அவர்கள்மீது அவர்களே திணித்துக் கொண்டுள்ள கடமையாகும்.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.அரசாங்கத்தில் இருப்பதற்கும் ஆட்சியில் பங்கேற்றிருப்பதற்கும், மந்திரியாய், ராஜாங்க அமைச்சராய் இருப்பதற்கும் உந்து சக்தியாய் இருந்தது றிஷாத் பதியுதீனே.
அந்த நன்றியை மறந்து முஸ்லிம் காங்கிரஸ் மேடைக்கு மேடை றிஷாட்டைத் திட்டித்தீர்த்து, மக்கள் காங்கிரஸூக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொல்லி வருகிறது.

ஏனெனில் இந்த முறை யார் எதைச் சொன்னாலும் தாம் பட்ட நன்றிக்கடனுக்காக முஸ்லிம்கள் மக்கள் காங்கிரஸூக்கு வாக்களிக்க உள்ளனர். அதன் மூலம் மக்கள் காங்கிரஸூக்கு அதிக எம்பீக்கள் கிடைக்கும். அந்த அரசியல் பலம் றிஷாட்டிற்கு கிடைக்குமானால் முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிஷாத் பதியுதீPன் வருவார்.
இதைத் தாங்க முடியாத காழ்ப்புணர்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் நன்றி மறந்து றிஷாத்தை அவமானப்படுத்த முனைகிறது.

யார் எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் இந்த நாட்டு முஸ்லிம்களில் றிஷாட்டின் மயில் சின்னத்துக்கும், றிஷாத்தின் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ள அனைத்து முஸ்லிம்களும் அவருக்கும், அவரது கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பது நன்றிக்கடனில் உள்ளதாகும் என்று கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *