Breaking
Sat. Apr 20th, 2024

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்பாக முதன்முதலாக வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவருக்கு விவசாய, நீர்பாசனத்தோடு சேர்ந்த கிராமிய பொருளாதார அமைச்சை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியமைக்காக இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த அமைச்சைப் பொறுத்தவரையில் எங்களது கட்சியின் தலைவர், எந்த அமைச்சு வேண்டும் என்று கேட்ட போது நான் சொன்னேன், அமைச்சை விடவும் ஹரிசன் அமைச்சரோடு இணைந்து வேலைசெய்வதற்கு நான் விருப்பமாக இருக்கின்றேன் என்று கூறினேன்.

அந்தவகையில், என்னுடைய கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்தத் தெரிவை முன்னிலைப்படுத்தி தந்தமைக்காக அவருக்கு, நான் இந்த இடத்திலேயே எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ஹரிசன் அவர்கள் எங்களுடைய சிறுபான்மை மக்களின் வேதனைகளையும், கஷ்டங்களையும், துன்பங்களையும் நன்கறிந்தவர். அந்தவகையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் மக்களுடைய துயர் துடைப்பதற்கு நீண்டகாலமாக புரையோடிப் போயுள்ள விவசாய சமூகத்தினுடைய பிரச்சனைகளை ஓரளவுக்கு நாங்கள் முன்படி கொண்டு செல்வதற்கு ஒரு முனைப்பை எடுப்பதற்காக ஒரு சூழலை இறைவன் எங்களுக்கு அமைத்துத் தந்துள்ளான்.

எனவே, எங்களுடைய கட்சியின் தலைமையோடு இணைந்து, இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர், அதேபோன்று, இந்த அமைச்சுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஹரிசன் ஆகியோர்களோடு இணைந்து அவர்களில் ஒருவராகவிருந்து பதவிபட்டம் எனும் வித்தியாசமில்லாமல் நாட்டு மக்களுக்கு சேவையாற்றக் கூடிய, விசேடமாக வடகிழக்கில் இருக்கின்ற எங்களுடைய தமிழ் பேசும் மக்களுக்கு அதிகமதிகம் அவர்களுடைய துயரை எங்களால் முடிந்தவரையில் துடைக்கக் கூடிய ஒரு நிகழ்வு நடக்கக்கூடிய நம்பிக்கை, தைரியம் எங்களுக்கு இருக்கிறது அந்த மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விவசாய நீர்பாசன கடற்தொழில் நீரியல்வள அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், கடற்தொழில் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெத ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பெளஷி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post