Breaking
Tue. Apr 23rd, 2024
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்.
கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, கெளரவ  உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவா்களால் பிரேரிக்கப்பட்ட, சிறுபான்மை இனத்துக்கு மறுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான இந்த ஒத்திவைப்புப் பிரேரணையில், சிறுபான்மையிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் பேசுவதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

கடந்த காலத்தில் ஒரு வரலாறு இருந்தது. சிறுபான்மை இனத்துக்கு ஒரு பாதிப்பு என்றால்,அல்லது ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அடுத்த சிறுபான்மை இனம் அதற்காகக் குரல் கொடுக்கும். அதாவது, முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டபொழுது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்; தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு வரும்பொழுது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்பட்டபொழுது அதற்காக அண்ணன் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்.

ஆனால், இன்று ஓர் இனம் மற்ற இனத்தைத்  துவம்சம் செய்கின்ற ஒரு நிலையைத்தான் எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஓர் இனத்தின் உரிமையை மறுக்கின்ற அல்லது ஓர் இனத்துக்கு நடக்கின்ற அநியாயத்தைப் பார்த்து சந்தோசப்பட்டு அதில் குளிர்காய்கின்ற ஒரு நிலைமையைப் பார்க்கும்பொழுது மிகவும் மனவேதனையாக இருக்கின்றது.

கடந்தகால வரலாற்றில் இடம்பெற்ற அந்த நல்ல மனிதர்களைப் போன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள்; இல்லையென்று சொல்லவில்லை. ஆனால்,முஸ்லிம் சமூகம் அங்கு குடியேற்றத்துக்காகச் செல்லும்பொழுது அல்லது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப்பற்றிக் கதைக்கின்றபொழுது அதற்கு எதிராகப் பிழையான விதத்தில் குரல் கொடுக்கின்ற ஒரு சிலரைப் பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். அந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த அநியாயம் என்ன? விடுதலைப் புலிகள் இராணுவத்தினரைத் தாக்கியபொழுது, அவர்கள் முஸ்லிம்களிடம் கப்பம் அறவிட்டபொழுது,முஸ்லிம்களின் சொத்தை அவர்கள் பயன்படுத்தியபொழுது, முஸ்லிம்களின் வளங்களை அவர்கள் சுரண்டியபொழுதெல்லாம் மெளனமாக இருந்தார்கள் முஸ்லிம் மக்கள்.
அவர்கள் உணவு கேட்டபொழுது சோறு சமைத்துக்கொடுத்திருக்கிறார்கள்; அவர்கள் பணம் கேட்டபொழுது பணம் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம் மக்கள் அவர்களைப் பாதுகாத்த வரலாறுதான் இருக்கின்றது. அவ்வாறிருந்தும், உடுத்த உடையோடு 24மணித்தியாலங்களுக்குள் முஸ்லிம்களை அவர்கள் வெளியேற்றியதற்குக் காரணம் என்ன?அந்த நேரத்தில் அதற்கு நியாயம் கற்பித்த, அதற்கு உறுதுணையாக இருந்த ஒரு சிலர் இன்று அரசியலில் இருந்துகொண்டு அன்று அவர்கள் என்ன நாடகத்தை நடித்து அதனை வழிநடத்தினார்களோ, அதை இன்றும் தொடருவதை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 22 வருட காலம் அகதி முகாம்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்கள் அவ்வாறு துன்பங்களை அனுபவிப்பதற்கான  நியாயம் என்ன?
சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்குகொண்டார்கள். இந்த நாடு சுதந்திரமடைவதற்கு அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதேபோன்று தமிழ்ச் சகோதரர்களுடைய கோரிக்கைகள் நியாயமாக இருக்கும்பொழுது அதற்கு ஒத்துழைப்புக்கொடுத்து அதற்காக வாதாடி, அந்தப் போராட்டத்துக்கு உயிரையும் கொடுத்த வரலாறுகள் இருக்கின்றன.இவற்றுக்கெல்லாம் பரிகாரமா, அந்த 22 வருடகால அகதி வாழ்க்கை? என்று கேட்கின்றேன்.யுத்தம் முடிந்ததும்  முஸ்லிம்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் செல்லும்பொழுது இதைவிடப் பரிதாபகரமான நிலையை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த யுத்தத்தின் பங்காளிகளாக இருப்பவர்கள் – அது தமிழராக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், அல்லது சிங்களவர்களாக இருக்கலாம் – நிம்மதியாக, அச்சமின்றி நடமாடக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
இன்று எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் யாரும் – அது தமிழ்க் கூட்ட
மைப்பு உறுப்பினர்களாக இருக்கலாம், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் – யாழ்ப்பாணத்துக்குச் சென்று வரலாம். கடந்த வாரம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நாங்கள் – ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதேபோன்று கூட்டமைப்பைச் சோ்ந்த கெளரவ சுமந்திரன் அவர்களுடைய செயலாளர் ஆகியோர் – வட பகுதியின் அபிவிருத்திக் களநிலவரத்தைப் பார்ப்பதற்காக பஸ்ஸில் பிரயாணம் செய்தோம்.
அனைவரும் ஒரு பஸ் வண்டியிலே கிளிநொச்சிக்குச் சென்றிருந்தோம். கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள், அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக அங்கு செல்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும்  செய்து தந்தார். அதற்காக இச்சந்தர்ப்பத்திலே நாங்கள் அவருக்கு எமது நன்றியுடன்கூடிய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவ்வாறே, நாங்கள் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தோம். முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்புலவு பிரதேசத்துக்குச் சென்றோம். அங்குள்ள இராணுவத்தினரால் ஐம்பது வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு கட்டுவதற்கு அரசாங்கம் மூன்றேகால் இலட்சம் ரூபாய் பணம் கொடுக்கின்றது. அங்குள்ள இராணுவத்தினர்  மூன்றே முக்கால் இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
 இவ்வாறான நல்ல நிலைமையொன்றை உருவாக்குவதற்காக முஸ்லிம் சமூகத்தினரும் பாடுபட்டு உழைத்திருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் மக்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீள்குடியேறச் செல்லும்பொழுது, முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்வதாகச் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகைகளில் அறிக்கை விடுகின்றார்கள்.
சில இனவாத பெளத்த அமைப்புக்கள், சிங்களவர்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாகக் கூறுகின்றன. நான் நேற்றைய  பத்திரிகையில் “வட மாகாணத்தில் மீள்குடியேறுகின்ற முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் செய்கின்றார்கள்” என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்ததைப் பார்த்தேன். இன்று இந்த நாட்டில் சமாதானம் உருவாவதற்குக் காரணமாக இருந்ததற்காகவா, நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? எனக் கேட்கின்றேன்.எங்களுக்கும் மானம், இரத்தம், துணிவு என்பன இருக்கின்றன. நாங்கள் கொதித்தெழுந்தால் மிக மோசமான நிலைமை உருவாகும். அடக்குமுறைக்கும் ஓர் அளவு இருக்க வேண்டும்.
வவுனியாவில் சாளம்பைக்குளம் கிராமம் யாருடையதென்று, அப்பிரதேசத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்களிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். 1990ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாளம்பைக்குளக் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டபொழுது அப்பிரதேசத்தில் 5-6 தமிழ் குடும்பங்கள் மாத்தி்ரமே இருந்தன. முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னரே அப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அவர்களை நாங்கள் மனிதாபிமானத்துடன் பார்க்கின்றோம். நாங்கள் அவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டுமெனக் கூறி அந்தக் காணிகளிலிருந்து துரத்தவில்லை. வன்னி மாவட்டஅபிவிருத்திக் குழுவுக்குப் பொறுப்பாகவிருக்கின்ற கெளரவ அமைச்சர் றிஸாத்பதியுதீன் அவர்கள் அம்மக்களிடம்,
நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே இருங்கள்ஆனால்உங்களுடைய காணிக்கு அருகில் முஸ்லிம் மக்கள் குடியிருப்பதற்குஅனுமதியுங்கள்” எனக் கேட்டிருக்கின்றார்.   அவ்வாறு முஸ்லிம் மக்கள் அவர்களுடைய காணிக்கருகில் உள்ள காட்டைத் திருத்திக் குடியிருந்ததனால்,  தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், “தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் செய்கின்றார்கள்” என பத்திரிகையில் அறிக்கை விடுகின்றார்.
ஏன், இத்தகைய அறிக்கையொன்றை விடவேண்டும்? எனக் கேட்கின்றேன். முஸ்லிம் மக்கள் தொன்றுதொட்டு வாழ்ந்த காணிகளைத் தமிழ் மக்கள் ஆக்கிரமிப்புச் செய்து  குடியிருந்தவேளையில் முஸ்லிம்கள் அதற்கெதிராகக் குரல் கொடுக்காமல், பத்திரிகைகளில் எவ்வித அறிக்கையும் வெளியிடாமல்,அவர்களை விரட்டியடிக்காமல் இருந்ததற்குப் பரிசாகவா, இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்  பத்திரிகையில் இவ்வாறான அறிக்கையை  வெளியிடுகின்றார்? என நான் கேட்கின்றேன்.
அதேபோன்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மடுப் பிரதேசத்தில் சுமார் 150 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டபொழுது  மடுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவராக இருக்கின்ற நான், அப்பிரதேசத்திலுள்ள காணிகளை இறைவனுக்குப் பயந்து அவர்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளித்து தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தேன். இவ்வாறு செய்ததற்காகவா, இந்த பெளத்த இனவாத அமைப்பு அங்குள்ள காணிகளை முஸ்லிம் மக்கள் ஆக்கிரமிப்புச் செய்கின்றார்கள் என்று கூறுகின்றது? எங்களுக்கு இன்னமும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. LLRC அறிக்கையில், “வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் பிரச்சினை, 1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி LTTE யினரால் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் பலவந்தமாக  வெளியேற்றப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியது; இப்பிரதேசங்களில் ஓர் இனத்தை அழிக்கும் திட்டத்தின்கீழ் LTTE யினரின் துப்பாக்கி முனையில் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகினர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.LLRC அறிக்கையின் 9.1.9.2. பிரிவில், “ஓர் இனத்தை அழிக்கின்ற முயற்சியில் LTTE யினர் ஆயுதமுனையில் முஸ்லிம்களை வெளியேற்றியிருக்கின்றார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
LTTE யினர் மேற்கொண்ட அந்த நடவடிக்கையின் ஒரு கட்டமா அல்லது அதன் தொடர்ச்சியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் இவ்வாறு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின்மீது மண் அள்ளிப்போடும் விடயம்?எனக் கேட்கின்றேன்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின்கீழ் வீடுகள் பங்கீடு செய்யப்பட்டுக் கொடுக்கின்றபொழுது முஸ்லிம் பயனாளிகள் கூடுதலாகத் தெரிவுசெய்யப்பட்டு வீடுகள் கையளிக்கப்படுகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றார்கள்.
இவர்களால் முடியுமாயின் அதனை நிரூபித்துக் காட்டட்டும். உதாரணமாக, மன்னார் மாவட்டத்திலுள்ள முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள தம்பட்டமுதலிக்கட்டு என்னும் எனது கிராமத்தில் 275 குடும்பங்கள் இருக்கின்றன. அதற்கு அருகில் கொக்குப்படையான் என்ற தமிழ்க் கிராமம் இருக்கின்றது.நாங்கள் இந்த இரண்டு கிராமங்களையும் இந்திய வீட்டுத் திட்டத்துக்காகத் தெரிவுசெய்தபொழுது, கொக்குப்படையானில் கிட்டத்தட்ட175 குடும்பங்கள் இருந்தன.அவற்றில் கிட்டத்தட்ட 150 -160 பேருக்கு கல்வீடுகள் இருந்தன. அவற்றை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் கட்டிக்கொடுத்திருக்கின்றன; இன்னும் கிட்டத்தட்ட 15-20குடும்பங்களுக்கே வீடுகள் தேவையாக இருந்தன.
எனது கிராமத்தை எடுத்துக்கொண்டால்,அங்குள்ள 275 குடும்பங்களில் ஒன்பது குடும்பங்களுக்குத்தான் வீடுகள் இருந்தன. எனவே,பயனாளி தெரிவில் தம்பட்டமுதலிகட்டுவுக்கு 170 வீடுகள் தேவையாக இருந்த அதேவேளை,கொக்குப்படையானில் 15 வீடுகள் தேவையாக இருந்தன. இது யார் செய்த தவறு? இது நாங்கள் நியாயமாக நடந்ததன் விளைவு! ஆரம்பத்தில் பயனாளிகளைத் தெரிவுசெய்தபொழுது,தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதாவது, முஸ்லிம்கள் தங்களது சொந்தக் கிராமங்களுக்குச் சென்று குடியேறுவதற்கு முன்னர், தமிழ் மக்கள் தங்களது கிராமங்களுக்குச் சென்று குடியேறுவதற்கு எமது வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கெளரவ அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அவர்கள் காணிகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.
இதேபோன்று அரிப்புத்துறை கிராமத்தை எடுத்துப் பாருங்கள்! அங்கு வாழுகின்ற 80 – 85வீதமானவர்களுக்கு வீடு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அருகிலுள்ள அல்லிராணிக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கின்ற முஸ்லிம் கிராமங்களை எடுத்துப் பாருங்கள்! அங்குள்ள எவருக்கேனும் ஒரு வீடுகூட இன்னமும் கிடைக்கவில்லை. எனவே,பயனாளி தெரிவில் இங்கு கூடுதலானவர்கள் தெரிவுசெய்யப்படுவார்களா? அல்லது அங்கு கூடுதலானவர்கள் தெரிவுசெய்யப்படுவார்களா? என்று அங்கலாய்க்காமல் உண்மை நிலை என்ன என்பதை practicalஆகப் பார்க்கவேண்டும்.
பத்திரிகையில் வெளிவருவதையோ அல்லது யாராவது சொல்வதையோ கேட்டுவிட்டு, இவ்வாறு பத்திரிகைகளில் அறிக்கை விடக்கூடாது.இவ்வாறு அறிக்கை விடுவது இனமுறுகலை ஏற்படுத்தும்; இனவிரிசலை ஏற்படுத்தும்.இவ்வாறானவர்களின் அறிக்கைகள், உரைகள் இந்த நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படுவதற்கு, இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுக்கும். இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களும் நான் மதிக்கின்ற மாண்புமிகு சுமந்திரன் அவர்களும்  இருக்கின்றார்கள்.
இவர்கள் நியாயம் தெரிந்தவர்கள்; நல்லெண்ணம் கொண்டவர்கள். எனவே, இவர்களாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற எமது தலைவர்களை முதலில் அழைத்துப் பேச வேண்டும் என்றுஅன்பாகவும் பணிவாகவும் கேட்டுக்கொள்கிறேன். [இடையீடு] முதலில் நாங்கள் பேசிக்கொள்வோம். இனப்பிரச்சினைத் தீர்வு என்பது வட மாகாணத்தில் தமிழர்களுக்கான,தமிழ் பேசுபவர்களுக்கான தீர்வாக இருக்க வேண்டும்.
அதாவது அது வெறுமனே தமிழ் மக்களுக்கான, கிறிஸ்தவ மக்களுக்கான, இந்து மக்களுக்கான மற்றும் முஸ்லிம் மக்களுக்கான தீர்வாக இல்லாமல் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வாக இருப்பதற்கு முதலில் நாங்கள் ஒன்றாக இருந்து கதைக்க வேண்டும். அதற்குப் பின்னர் நாங்கள் அரசாங்கத்துடன் பேசியோ,ஜெனீவாவுக்கு அல்லது வேறு எங்கேயாவது சென்று பேச்சுவார்த்தை நடத்தியோ, எங்களது உரிமைகளைக் கேட்போம் என்று இந்த நேரத்திலே தெரிவித்து, இதற்குப் பிறகாவது பிழையான அறிக்கைகளை, இனவாதத்தைத் தூண்டுகின்ற அறிக்கைகளைப் பத்திரிகைகளில் வெளியிடாமல் ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றிணைந்து பேசி அதனைத் தீர்த்துக் கொள்வோம் என்று கேட்டு, விடைபெற்றுக்கொள்கின்றேன்.  நன்றி, வஸ்ஸலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *