Breaking
Fri. Apr 19th, 2024

“திகாமடுல்ல மாவட்ட மக்கள் என்னை ஆதரித்து, அங்கீகரித்து கடந்த பராளுமன்றத் தேர்தலில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்தமையை என்றும் மறவாமல் இருக்கின்றேன்.”
– இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

‘ரண் மாவத்’ அபிவிருத்தி திட்டத்தினூடாக எமது பிரதேசத்திலுள்ள இரு பெரும் வீதிகளுக்கு காபட் இடும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சில மாதங்களுக்கு முன்னர் இம் மண் எனக்கு கொடுத்த வாக்குகளுக்கு பிரதியுபகாரமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரினால், ஐ.தே.க. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எனக்கு கிடைத்தது.

இது இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் கிடைத்த பெரும் பாக்கியம் என்றுதான் கூற வேண்டும். தேர்தலில் களம் இறங்குவதற்கு முன்பே இப் பிரதேசத்தின் அபிவிருத்திகளை பல தரப்பட்ட கல்வியலாளர்களுடன் கலந்துரையாடி சிந்தித்தவனாக இருந்த சந்தர்ப்பத்தில் எமது அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்ற எவ்வாறான திட்டங்களுக்கும் என்னால் இலகுவாக செயற்றிட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க கூடியதாக உள்ளது.

அதனடிப்படையிலேதான் எமது பிரதேசத்திலும், எமது மாவட்டம் முழுவதும் ‘கம்பெரலிய’ வேலைத்திட்டத்தின் மூலம் பல அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். அது போல ஒன்றுதான் ‘ரண் மாவத்’ என்கின்ற இத் திட்டமும்.

இத் திட்டம் அறிமுகப்பட்டதும் எனது முயற்சியில் எமது பிரதேசத்திற்கு இதற்கான நிதியினை கொண்டுவர எத்தணித்த சமயம் ஆராய்ந்து பார்த்தபோது அதிக மக்கள் பயன்படுத்துகின்ற சம்மாந்துறை அல் அர்ஷத் வீதி முதல் மல்கம்பிட்டி வரையிலான வீதியும், சம்மாந்துறை முதலாம் குறுக்குத் தெரு முதல் பஸார் வீதி வரையான வீதிகளில் காபட் இட்டு அழகுபடுத்தப்பட வேண்டிய தேவை இருந்துவருகின்றமையை அவதானிக்க முடிந்தது.

அந்த சந்தர்ப்பத்திலேதான் இவ்வாறு இவ்விரு வீதிகளுக்கும் ரூபா 400 இலட்சம் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளோம். இதே சமயம் ‘கம்பெரலிய’ திட்டத்தினூடாக அல் அர்ஷத் வித்தியாலய மைதானத்தினை அழகுபடுத்துவதற்காக மின்விளக்குகள் அமைப்பதற்காக ரூபா 20 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இது போன்று இம் மாவட்டத்திலுள்ள பல பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தவண்ணமே உள்ளோம்.

எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் துரதிஷ்டவசமாக எமது முஸ்லிம் சமூகம் நசுக்கப்படும் படலங்கள் அரங்கேறினாலும், நாங்கள் அனைவரும் ஒற்றுமையை பற்றிப் பிடித்தவர்களாக இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திற்கும், இன நல்லுறவுக்கும் வித்திட்டவர்களாகவே செயற்படுகின்றமை குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும்.

எனவே தான் இறைவன் அருளால், எமது அரசாங்கத்தின் அத்தனை திட்டங்களிலும் எமது சமூகம் புறக்கணிக்கப்படாமல் கனிசமான நிதி ஒதுக்கீடுகளும், அபிவிருத்திகளும் மேலோங்கியவண்ணம் இருக்கின்றமை பாராட்டப்படவேண்டியதாகும்.

எமது சமூகம் பல்வேறு இன்னல்களுக்குள் அகப்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்திலும் பற்பல அபிவிருத்திகளுக்கு வழிவகுத்துள்ள நாங்கள், இப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் பெரும் கவனம் செலுத்துவோம். நீங்கள் ஒரு போதும் நம்பிக்கை தளரக் கூடாது, எமக்கு வாக்களித்த மக்களின் நலனும், திருப்தியுமே எமது சந்தோஷம் – என்றார்.

Related Post