Breaking
Fri. Apr 19th, 2024

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால்  எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும்  தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கண்டியில் இடம்பெற்ற போதே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத செயற்பாடுகள் ,வன்முறைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக துறந்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவு படுத்தினர்.

இங்கு கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன் எம்.பி தன்மீது  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.

அவர் கூறியதாவது,

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்குமென்று, குண்டு தாக்குதல் நடந்த (21-04-2019) அன்றைய தினமே பேராயர் கார்டினல் ரஞ்சித் அவர்களை சந்தித்து, முஸ்லிம் மக்களின் அரசியல் மற்றும் சமயம் சார்   பிரதிநிதிகளான நாம் அனைவரும் எடுத்துரைத்தோம். அன்று தொட்டு இன்று வரை இந்த பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. பாதுகாப்பு படையினரின் அனைத்து தேடுதல் பணிகளுக்கும் நாங்கள் உதவினோம். சாய்ந்தமருதுவில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை எமது சமூகம் காட்டிக்கொடுக்க முனைந்த போது அவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வீசியெறிந்து எம்மை காட்டிக்கொடுக்க வேண்டாமென கெஞ்சினர். எனினும் சாய்ந்தமருது மக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகளை காட்டிக்கொடுத்தனர். சூத்திரதாரிகள் இவ்வாறு செய்யவேண்டாமென கெஞ்சிய போதும் பொலிசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் இருந்த இடத்தையும் காட்டிக்கொடுத்து பயங்கரவாதிகளை இல்லாமலாக்க உதவினோம்.

பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. இவ்வாறான பயங்கரவாதிகளை இஸ்லாமியர் என நாங்கள் கூறமாட்டோம்.குர் ஆனிலோ நபி பெருமானாரின் வழிகாட்டலிலோ மக்களை கொலை செய்யுமாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை . அத்துடன் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்த பயங்கரவாதத்திற்கு முற்றுமுழுதாக எதிரானவர்கள்.

மகா நாயக்க தேரர் தற்போது கூறியவாறு, வரலாற்றிலே இலங்கை முஸ்லிம்கள் எந்தக்  காலத்திலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களும் இல்லை, சம்பந்தப்பட்டவர்களும் இல்லை. இந்த பயங்கரவாதம் உலகளாவிய பயங்கரவாதம். நமது நாட்டிலுள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் இதனுடன் தொடர்புபட்டு விட்டனர். எனவே தான் இந்த செயலில் ஈடுபாடு கொண்டவர்களை அழித்தொழிப்பதற்கு முழு மூச்சாக ஒத்துழைக்கின்றோம் . நாங்கள் எந்த அடிப்படைவாதத்தையும் ஆதரிக்கவுமில்லை ,ஆதரிக்கவும் மாட்டோம் .எல்லோருடனும் இணைந்து அதனை ஒழிப்பதற்கு பாடுபடுவோம். இந்த பயங்கரவாதச் செயலை மையமாக கொண்டு ஒரு சில கட்சியை சேர்ந்த  அரசியல்வாதிகள் சிலர்  தமது அரசியல் எழுச்சிக்கு இதனை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதன்மூலம் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயற்படுகின்றனர் . இவர்களின் இந்த செயற்பாடுகளுக்கு சில ஊடகங்களும் துணை போகின்றன. அந்தவகையில் முஸ்லிம்களிடம் வாள்கள் இருப்பதாகவும் , ஆயுதங்கள் இருப்பதாகவும் ஒரு பிரமையையும் காட்டி மக்கள் மத்தியிலே பீதியையும் முஸ்லிம்கள் தொடர்பான வெறுப்பையும் ஊட்டும் முயற்சிகளிலே அவை ஈடுபடுகின்றன. அப்பாவி முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் அவற்றின்   செயற்பாடுகள் அமைகின்றன.

அதுமாத்திரமன்றி எனக்கெதிராக வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர். பாதுகாப்பு படையினரும் பொலிசாரும் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற வேளை,  சில அரசியல்வாதிகள் தமது குறிக்கோளை அடைந்து கொள்வதற்காக இதனை திசைதிருப்புகின்றனர். இவ்வாறு  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

Related Post