Breaking
Wed. Apr 24th, 2024
வில்பத்து தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
 
பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப் பகுதியில், கல்லாறு சரணாலயத்தில் காட்டை அழித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பொறுப்புக்கூற வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பறிவித்திருந்தது. இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
 
அழிக்கப்பட்ட வனப் பகுதியை மீள உருவாக்க, அவர் அப்பகுதியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் எனவும் இதன்போது மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த தீர்ப்பானது சட்டத்துக்கு முரணானது எனவும், அத்தீர்ப்பை வலுவிழக்கச் செய்யுமாறும் இந்த மேன்முறையீடு ஊடாக ரிஷட் பதியுதீன் கோரியுள்ளார்.
 
ஆப்தீன் சட்டத்தரணிகள் நிறுவனம் ஊடாக இம் மேன்முறையீட்டினை தாக்கல் செய்துள்ள ரிஷாட் பதியுதீன், 8 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
 
அதன்படி சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மன்னார் மாவட்ட செயலாளர், சுற்றாடல் அமைச்சர், மற்றும் சட்டமா அதிபர் ஆகிய 8 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
 
மேன் முறையீட்டு நீதிமன்றம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு உட்பட்டு விடயம் நடந்ததாக கூறப்படும் காலப்பகுதியில், தான் வீடமைப்பு அமைச்சரோ அல்லது வனப் பாதுகாப்பு அமைச்சராகவோ இருக்கவில்லை என விஷேட மேன் முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ள ரிஷாட் பதியுதீன், தான் காடழிப்பு மற்றும் மீள் குடியமர்த்தல் நடவடிக்கைகளை குறித்த பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கவில்லை எனவும், அவ்வாறு தான் செயற்பட்டமைக்கான எந்த சான்றுகளும் இல்லாத நிலையில், குறித்த மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறும் அம்மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.
கடந்த 2019 நவம்பர் 19 ஆம் திகதி உயர் நீதிமன்றம் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post