Breaking
Sat. Apr 20th, 2024

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ச நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றகையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

1958ல் நாட்டில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. அதன் பின்னர் 1997 இல் புயல் வந்தது 2004ல் சுனாமி வந்தது. இவ் அனைத்து அனர்த்தங்களுக்கும் நாங்கள் முகம் கொடுத்தோம். மக்களை மீளக் கட்டியெழுப்பினோம்.அதற்கான அனுபவம், திறமை எமது படையினருக்கும் பொலிஸாருக்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளது.

எனவே இன்றைய அனர்த்த வேளையில் ஒருவரை குற்றம்சாட்டிக் கொண்டிருக்காது அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாம் இதனை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது.அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை குறைபாடுகளும் உள்ளன.

இயற்கை அனர்த்தம் தொடர்பில் நேர காலத்தோடு அறிவிப்பு விடுத்திருந்தால் பாரிய பாதிப்புக்களை தவிர்த்திருக்க முடியும்.அதேவேளை அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தமது கடமைகளை செய்ய அச்சப்படுகின்றனர்.

எனவே அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கி தடையின்றி மக்கள் சேவைகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.மலைநாட்டில் அழிந்துவரும் வன வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் மரணித்தவர்களுக்கு மீள உயிர் கொடுக்க முடியாது.ஆனால் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி அக் குடும்பங்களை வாழ வைக்க முடியும். இதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

அதேவேளை, அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகள் சட்ட ரீதியானதா? சட்ட விரோதமானதா? தாழ்நிலங்களில் அமைக்கப்பட்டதா? என்பது தொடர்பில் கவனம் செலுத்தாது வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு முன்னெடுக்கும் அனைத்து நிவாரண நடவடிக்கைகளுக்கும் எமது பூரண ஆதரவை வழங்குவோம் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *