Breaking
Thu. Apr 25th, 2024

அரச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு தகவல்களை வழங்க மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்தது என வெளியாகிய செய்திகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அது உண்மைக்குப் புறம்பான செய்தி என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று(14) விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கியின் மூலம் அரச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு தகவல்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் கடந்த தினங்களில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டது. அரச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு தகவல்கள் வழங்குவதற்காக கணக்காய்வாளர் திணைக்களத்தின் மூலம் மத்திய வங்கியிடம் தகவல்கள் கேட்கப்பட்டிருந்த போதும், அத்தகவல்களை வழங்குவதை மத்திய வங்கி மறுத்து இருந்தது என்பதே அச்செய்தி அறிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது உண்மைக்கு புறம்பான தகவலாகும்.

அரசியலமைப்பின் 154 (5) பிரிவு மற்றும் நிதி நிலைமைகள் சட்டத்தின் 43 ஆவது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் தம்மிடம் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை கணக்காய்வு நடவடிக்கைகளுக்காக கணக்காய்வாளருக்கு ஒப்படைப்பதற்கு மத்திய வங்கி கூட்டுப்பொறுப்புடையது. அதேபோன்று மிகவும் இரகசியமான மட்டத்துக்கு உரித்தான மத்திய வங்கியின் தகவல்கள் மற்றும் ஆவணங்களை பிரசித்தப்படுத்துவதில் இருந்து விலகி நடக்க வேண்டும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் மத்திய வங்கியின் அனுமதியினை பெற்றே அவ்வாறு தகவல்களை பெற முடியும் எனவும், 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி சட்ட மா அதிபரின் மூலம் மத்திய வங்கி மற்றும் கணக்காய்வாளர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

சட்டமாதிபர் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் மத்திய வங்கியின் இரசகிய தன்மையினை பாதுகாப்பது குறித்த சம்பிரதாயங்களுக்கு கீழ் குறித்த இரகசிய நிலைக்கு உரித்தான தகவல்கள் அடங்கிய ஆவணங்களை வங்கிக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனினும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு மத்திய வங்கிக்கு வருகை தந்து, அங்குள்ள பல்வேறு பிரிவுகளுக்கு சென்று தகவல்களை பெற்றுக் கொள்ள மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்ய அவகாசம் உள்ளது. சட்டமாதிபரின் மூலம் 2004 ஆம் ஆண்டு ஆலோசனை வழங்கப்பட்டதன் பின்னர், மத்திய வங்கி குறித்த ஆலோசனைகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வந்தது. அது மாத்திரமல்ல திறைசேரி முறி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் மூலம் மத்திய வங்கியிடம் தகவல்கள் தேவையென வினவி இருந்த போது, தேவையேற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் எவரேனும் நேரடியாக மத்திய வங்கிக்கு வருகை தந்து குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 03 ஆம் திகதி அன்று அறிவித்திருந்தது.

கடந்த இரண்டரை ஆண்டு காலத்தினுள் திறைசேரி முறி தொடர்பில் தகவல்கள் அரச வர்த்தக குழு முன்னிலையில் முன்வைக்கப்பட வேண்டும் என செயற்குழு வேண்டுகோள் விடுத்த சந்தர்ப்பங்களில் மத்திய வங்கி அதிகாரிகள் மூலம் முன்பு கூறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு அமைவாக தகவல்கள் முன்வைக்கப்பட்டன. அதன் போது பரிசீலனை நடவடிக்கைகளுக்காக குறித்த தகவல்கள் அத்தியவசியம் என செயற்குழு சுட்டிக்காட்டி இருந்தது. பின்னர், விடயம் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கைகள் வடிவமைப்பு அமைச்சின் செயலாளர் அவர்களை அழைத்து தகவல்களை கேட்டறிந்தார்.

பின்னர் பிரதமரின் செயலாளர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றது. பின்னர் முன்பு குறிப்பிடப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகவல்கள் பாராளுமன்ற செயற்குழுவிடம் முன்வைப்பது தொடர்பான நடைமுறை தொடர்பில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக பிரதமரினால் பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள் தொடர்பான இரகசியத்தன்மையை பாதுகாப்பதன் பொறுப்பின் அடிப்படையில் தேவையான அனைத்து தகவல்கள் கணக்காய்வாளர் மூலமாக மத்திய வங்கியின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சபாநாயகர் தேவையான தகவல்களை அரச வர்த்தக செயற்குழுவுக்கு வழங்குவது தொடர்பான ஒருங்கிணைப்பு பணியினை மேற்கொள்வார்.

எதிர்காலத்தில் இவ்வாறான தகவல்கள் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையொன்று அவசியம் என பிரதமரினால் அங்கு மேலும் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்துக்கு இவ்வாறான இரகசியமான தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், அவற்றினை பெற்றுக் கொள்வதற்கான பாதையினை வடிவமைப்பதற்கும், தேசிய கணக்காய்வாளர் சட்டத்துக்கு இது தொடர்பான அம்சங்களை உள்ளடக்கவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *