Breaking
Tue. Apr 23rd, 2024

-அமைச்சின் ஊடகப்பிரிவு –

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார்.

விசாரணை அதிகாரிகள் 62 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

நுகர்வோர் அதிகார சபையானது நுகர்வோர் பாதுகாப்பை நிர்ணயிப்பதுடன் நியாயமான சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவதன் ஊடாக உள்நாட்டு சந்தையை திறன்மிக்கதாக மாற்றுவதே பிரதான நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக போட்டி விலையை கட்டுப்படுத்துவதன் ஊடாக நிலையான சந்தையொன்றை கட்டியெழுப்பும் தேசிய ஆளுமைமிக்க நிறுவனமாக நுகர்வோர் அதிகார சபை காணப்படுகிறது.

இவ்விதம் பார்க்கும் போது நுகர்வோர் அதிகாரசபையானது நாட்டுக்கு பாரிய சேவையொன்றை வழங்குவதுடன் ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனமாகவும் செயற்படுகின்றது. இந்நிறுவனத்தில் இணைந்து கொள்பவர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய சேவை செய்யும் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவாகவும் இருக்கிறார்கள்.

2016ஆம் ஆண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபையானது 21,819 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதுடன் இவற்றில் 21,000இற்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலமான வருமானமாக சுமார் 90.2 மில்லியன் ரூபாவையும் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக மக்களை அறிவூட்டும் 1609 நிகழ்ச்சித் திட்டங்களையும் நிறுவனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2015ஆம் ஆண்டு தண்டப்பணமாக 67.9மில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்ட போதும் 2016ஆம் ஆண்டு இத்தொகை 90.2 மில்லியனாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

விசாரணை அதிகாரிகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நேரடி பங்களிப்பு வழங்கும் பொறுப்புமிக்க அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவ்வாறே நிறுவனத்தின் எதிர்கால செயற்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகும். அதிகாரசபையின் தலைவர் என்ற முறையில் புதிதாக சேவையில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் பதவியேற்ற அனைவரும் பதவியின் கௌரவம், நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *