Breaking
Tue. Apr 16th, 2024
  • ஊடகப்பிரிவு

முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கெதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?. இவ்வாறு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெகுண்டெழுந்தார்.

ஜெனீவா மனித உரிமைப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

அல்லாஹ்வையும், முஸ்லிம்களின் இறைத்தூதரையும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்தும் கேவலப்படுத்தி பழி சொல்லி வரும் மதகுரு ஒருவரினதும், அவரைச் சூழ்ந்திருக்கும் திருடர்களினதும் கேவலங்கெட்ட செயலை தொடர்ந்து அனுமதித்து வருகின்றீர்கள். அந்த மதகுருவுக்கெதிராக எத்தனையோ முறைப்பாடுகள் இருந்தும் அவரைக் கைது செய்வதற்கு பின்னடிக்கின்றீர்கள். அவரைக் கைது செய்வதற்கென நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்னும் பூச்சாண்டி காட்டி வருவது வெட்கமாயில்லையா?

எவரையும் கைது செய்ய வேண்டுமென்பதோ, எவரையும் சிறையிலடைத்து துன்புறுத்த வேண்டுமென்பதோ முஸ்லிம் சமூகத்தின் நோக்கமாக இராத போதும், அந்த மதகுரு முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடாததனாலேயே அவரைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம். எங்களை தொடர்ந்தும் அவர் துன்புறுத்தியே வருகின்றார். அதனால் தான் நானும் பொலிஸ் தலைமையகத்தில் அவருக்கெதிராக முறைப்பாடொன்றை செய்தேன். ஆனால் இன்னும் கைது நாடகம் தான் தொடர்கின்றதே ஒழிய அவரைக் கைது செய்ய மறுக்கிறார்கள். அவர் ஒழிந்திருக்கின்றதாக பம்மாத்துக் காட்டுகிறார்கள். பொலிஸ் மா அதிபருக்கே சவால் விட்டுக் கொண்டு சட்டத்தையும் கையிலெடுத்து அவர்  தான் நினைத்தபடி ஆடி வருகின்றார்.

திறமையான புலனாய்வுப் பிரிவு நமது நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த மத குரு இருக்கும் இடத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது தான் வெட்கமாக இருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான துன்பங்கள் இன்னுமே தொடர்ந்த வண்ணமுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனத்தை எரித்தும், அழித்தும் வருகின்றார்கள். சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. ஆனால் இவற்றை முறையிடும் போது பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகின்றதே ஒழிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இல்லை. இத்த்னை சீ சி டீ வி கமெராக்களை பொருத்தியும் என்ன பயன்? நாசகாரிகளை உங்களால் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது எங்களுக்கு வேதனையும் இருக்கின்றது.

இன்று காலை கூட நுகேகொட விஜயராமையில் கடையொன்றை எரித்தார்கள். அதே போல நான் நடந்த சம்பவ்ங்கள் அனைத்தையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

முஸ்லிம் சமூகம் ஆயுதம் தூக்கிய சமூகம் அல்ல. சிங்கள இளைஞர்களுடனோ, ஒரே மொழி பேசும் தமிழ் இளைஞர்களுடனோ இணைந்து ஆயுதம் தூக்கி போராடாத சமூகம். இருக்கின்ற நாட்டில் ஏனைய சமூகத்துடன் இணைந்து சுமூகமாக வாழப் பழகிக் கொண்ட சமூகம். குர் ஆனும் நபி பெருமானாரும் எங்களுக்கு அதனையே சொல்லித் தந்துள்ளனர். எனவே எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

எங்களுக்கெதிராக செயற்பட்டு, எமது நிம்மதியை குலைப்பவர்களுக்கெதிராக ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் இந்த உயர் சபையில் வலியுறுத்த விரும்புகின்றோம். இந்த சம்பவங்களை உடன் தடுத்து நிறுத்த ஏற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என்பதையும் இந்த சபையில் கூறிக்கொள்ள விரும்பிகின்றேன் என்று அமைச்சர் கூறினார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *