Breaking
Tue. Apr 23rd, 2024
வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில்  நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக அதிகாரிகள், உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்று மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், இந்தோனேசியா, பாகிஸ்தான், பர்மா ஆகிய நாடுகளிலிருந்து ஒரு லட்சம் மெற்றிக் தொன் நாடு, மற்றும் சம்பா அரிசி வகைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் அந்த நாடுகளின் அரசாங்கத்திற்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுவுள்ளதாகவும் நிபுணர்கள் அடங்கிய குழு அந்த நாடுகளுக்கு சென்று மாதிரிகளை பரீட்சித்து திருப்தி கண்ட பின்னர் இறக்குமதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத் தவிர இந்தியாவிலிருந்து மேலும் 1லட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த நாடுகளின் தனியார் துறையினரின் உதவியையும் அவர்கள் விரும்பும் பட்சத்தில்  பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்நாட்டுச் சந்தையில் அரிசியை தாராளமாக்கி நுகா்வோர் மற்றும் வியாபாரிகளுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தத் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தனது அமைச்சின் கீழான கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இது தொடர்பான செயற்பாடுகளை துரிதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மாதம் 22ம் திகதி கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் திருமதி. சூளாமணி சாட்ஸ்சுமன், இந்தோனேசிய தூதுவர் குஸ்ட்டி னக்ரா அரடியெஸா, பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் அஹமட்கான் சிப்றா ஆகியோருடன் அரிசி இறக்குமதி தொடர்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்றை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *