Breaking
Fri. Apr 19th, 2024

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஷ்ரபின் மனைவி தொடக்கம் ஹசன் அலி வரைக்கும் இருபத்தியேழு பேர் துரத்தப்பட்டுள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206டி கிராம சேவகர் பிரிவிற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வட்டாரக் கிளை அங்குரார்பன நிகழ்வு முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஏ.சலாம் தலைமையில் பிறைன்கேட் கல்வி நிலையத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு மறைந்த தலைவருடன் இருந்து கஷ்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக துரத்தப்பட்டு இறுதியாக கட்சியின் அடி மரமான ஹசன் அலியையும் துரத்தியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு சரியான வழி நடத்தலை செய்யவில்லை என்று நாங்கள் நாட்டிலுள்ள எல்லா முஸ்லிம் மக்களுக்கும் சொன்ன பொழுது எங்களுக்கு கட்சியில் துரோகிகள் என்று பட்டம் சூட்டி எங்களை கட்சியில் இருந்து துரத்துவதற்கு எடுத்துக் கொண்ட உபாயங்களை கடந்த காலங்களில் கண்டோம்.

எங்களை துரோகிகள் என்று சொன்னவர்கள் தான் இன்று அவர்கள் துரத்தப்படுகின்ற பொழுது கட்சிக்குள்ளே தனியாதிக்கம் என்றும் கட்சிக்குள் வியாபாரம் நடக்கின்றது என்றும் சொல்லுகின்றார்கள் நாங்கள் பல வருடங்களுக்கு முன்பு சொன்ன செய்தியை இன்று அவர்கள் உண்மையென்று உணர்ந்துள்ளார்கள் என்று கல்குடா மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்;.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட போது முப்பத்தி நான்காயிரம் பேர் வாக்களித்தார்கள். இந்நாட்டிலே அரசியல் அனுபவம் கூடியவர்கள் அம்பாறை மாவட்ட மக்கள். தினமும் அரசியலை பற்றியே பேசுகின்றவர்கள் அப்படிப்பட்ட மக்கள் எங்கள் கட்சி கொள்கையையும் கட்சியின் தலைமைத்துவத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிறந்த அந்த மண்ணிலே அக்கட்சியின் மீது நம்பிக்கை இழந்து விட்டதால்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

இதன் போது கட்சியின் அங்கத்துவ படிவம் அங்கத்தவர்களுக்கு பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *