Breaking
Wed. Apr 24th, 2024

கிரான் பிரதேசத்திற்குட்பட்ட புணாணை மேற்கில் விவசாயம் செய்யும் விவசாயிகளை மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திட்டத்திற்குள் உள்வாங்க முன்வர வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிநேசன் ஆகியோரது தலைமையில் மாவட்ட செயலகத்தில் திங்கள்கிழமை (24.07.2017) இடம்பெற்ற போது விவசாயிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

புணாணை மேற்கில் உள்ள விவசாயிகள் முறையாக தண்ணீருக்கு பணம் வழங்கியும், மானிய உரங்களை விவசாயத் திணைக்களத்தில் பெற்று வரும் நிலையில் இவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பான திணைக்களத்தின் வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தில் இதுவரை உள்வாங்கவில்லை.

இவ்வாறு மக்களை நீர்ப்பாசன திணைக்கள திட்டத்திற்குள் உள்வாங்க முடியவில்லை என்றால் அவ் விவசாயிகளை மகாவலிக்கு வழங்குங்கள். விவசாயிகள் அனைவரும் மகாவலிக்கு செல்வதற்கு தயாராகுவார்கள். ஒவ்வொரு வருடமும் தண்ணீர் வழங்கப்படுகின்றது. ஆனால் நீர்ப்பாசன திணைக்களத்தினர் புணாணை மேற்கில் உள்ள விவசாயிகளை முறையாக உள்வாங்காமல் இருப்பதால் தண்ணீர் மறிக்கப்படுகின்றது.

தண்ணீரை மறித்து சிலர் பெற்றுக் கொள்வதால் ஏனையவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. பின்னர் பல்வேறு பிரச்சனை இடம்பெற்றதன் பிரகாரம் மாதுறு ஓயாவில் தண்ணீர் பெற்று வழங்கப்படுகின்றது. ஏன் இவர்களை மாவட்டத்திற்குள் உள்வாங்கி தண்ணீர் வழங்க முடியாது.

புணாணை மேற்கில் உள்ள விவசாயிகள் எட்டாயிரத்திற்கும் அதிகமான நெற்செய்கை காணிகள் முறையான நீர்ப்பாசனத்திட்டம் இன்மையால் காலம் காலமாக பாதிப்படைகின்றது இவர்களை முறையாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாச திணைக்களத்தின் திட்டத்தில் புணாணை மேற்கில் உள்ள விவசாய நிலங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நண்மையடைவார்கள்.

தங்களுக்கு தண்ணீர் தேவை எனில் தேவையான அளவு தண்ணீரை பெற்றுத் தருவதற்கு அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கிறோம் காலாகாலமாக பாதிக்கப்படும் இவ் விவசாயிகளுக்கு நீர்பாசன திணைக்களம் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காவிடின் இவர்களை மகாவலிக்கு அனுப்புவதற்கு முடிவெடுங்கள் அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் அவர்களது பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கிடைக்கும் என்றார்.

பிரதி அமைச்சரின் வேண்டுகோலை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானத்தின்படி நீர்பாசன திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு எழுத்துமூலம் அறிவித்து புணாணை மேற்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைக்கு நிறந்தர தீர்வு பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாக நீர்பாசன திணைக்களம் சார்பாக கலந்து கொண்ட நீர்ப்பாசன பொறியளாலர் எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

இதன் போது மாவட்டத்தில் இடம் பெறும் அபிவிருத்தி, தொடர்பாகவும், பாடசாலைகளில் பதிலீடு இல்லாமல் இடம் பெறும் இடமாற்றம் தொடர்பாகவும், சுகாதாரம், மீன்பிடி, வீடமைப்பு, திவிநெகும திணைக்களத்தின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *