Breaking
Sat. Apr 20th, 2024
தேர்தல் வெற்றிக்காக  இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையை பாழ்படுத்துகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் கலாநிதி மொஹமட் ஷரீப் அனீஸ் அவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று மாலை (18.08.2017) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது,
அரசியல் பயணம் மிகவும் கடினமானது. அதுவும் வன்னி மாவட்டத்தில் இந்த பயணத்தில் தாக்குப்பிடிப்பதென்பது மிக மிகக் கடினமானது. அகதியான ஒருவர் அரசியலுக்குள் வந்து எம்.பியாகி, அமைச்சராகி, பின்னர் கட்சியொன்றை தொடங்கி சமூகத்துக்கு தொடர்ந்தும் பணியாற்றுவதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக இருந்த போதும், இறைவனின் உதவியாலும் மக்களின் ஆதரவினாலும் இதனைச் சாதிக்க முடிந்தது.
இரண்டு முறை பாராளுமன்றம் செல்வதே கடினமானதென அப்போது சிலர் கூறினர். ஆனால் இறைவனின் நாட்டம் இருந்ததனால் நான்கு முறை செல்ல முடிந்திருக்கின்றது. நான் சார்ந்த சமூகத்துக்கு மாத்திரமின்றி தமிழ் சிங்கள சமூகத்துக்கும் எனது பணிகளை வியாபிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறேன்.
யுத்த காலத்தில் வன்னியில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகளை எண்ணிப்பார்க்கும் போது ஒருவகையான பீதி வருகின்றது. கலிமாவை மொழிந்து கொண்டு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் இந்தப் பிரதேசத்தில் மன்னாருக்கும் வவுனியாவுக்கும் இடையே எத்தனையோ நாட்கள் பயணம் செய்திருக்கின்றோம்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சகோதரர்கள் எண்ணற்ற துன்பத்தில் துவழ்கின்றார்கள் என்று தெரிய வந்த போது புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கனகரட்ணம் எம்.பியுடன் சென்ற காலங்களை நினைத்துப் பார்க்கின்றோம்.
அரசியல்வாதிகள் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியது சகஜம்தான். ஆனால் நாங்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் நினைத்தும் பார்க்க முடியாதவை. இறைவனின் உதவியுடன் நாம் மேற்கொண்ட இந்த அரசியல் பயணத்தில் 12 வருடங்களுக்கு முன்னரே சகோதரர் அனீசும் எம்முடன் இணைந்து கொண்டவர்.
அரசியலுக்குள் நான் கால் பதித்த போது எனக்கு அப்போது வயது 26. என்னைப் பார்த்து சிலர் சிரித்தார்கள். “இவரா? இந்த சின்னப் பையன் பாராளுமன்றம் போவதா? இவருக்கு முடியுமா? என்று என்னைப்பற்றி ஏளனத்துடன் கதைத்த போது சில பெரியவர்கள் எனக்குத் தைரியமூட்டி “முன்னே செல். இறைவனின் உதவியால் உனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். நீ சமுதாயத்துக்குப் பணியாற்றுவாய்” என்றார்கள்.
உளத்தூய்மை, இறைவன் மீதான நம்பிக்கை, சமுதாயத்தின் மீது கொண்ட அதீத பற்று இருந்ததனால் கரடு முரடான இந்த அரசியல் பயணத்தை வெற்றிப் பயணமாக இறைவன் மாற்றித் தந்தான்.
கலாநிதி. அனீசின் நட்பு கிடைத்த போது அவரிடம் பல அரிய நல்ல பண்புகளைக் காண முடிந்தது. படித்தவன் என்ற மமதை இல்லாது நல்ல பண்பாளராக, எல்லோரையும் சமனாக மதிக்கும் அன்புள்ளம் கொண்டவராக அவர் விளங்;கினார். எனது அரசியல் வாழ்வில் இக்கட்டான நிலைகள் ஏற்பட்ட போதெல்லாம் அவர் கைகொடுத்திருக்கின்றார். அத்துடன் சிறந்த ஆளுமையை அவரிடம் கண்டோம்.
கலாநிதி பட்டம் பெற்ற ஒருவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் ஆசானாக இருக்கும் ஒருவர், எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இன்றி என்னுடன் இணைந்து பணியாற்றினார். அரசியல் மேடைகளில் இவ்வாறான ஒருவர் பிரசாரம் செய்வதென்பது சாதாரண விடயம் அல்ல. இதனால் சமூக வலைத்தளங்களும் முகநூல்களும் இவரை புண்படுத்திய பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
பொதுத் தேர்தல் வந்த போது போட்டியிடுகின்றீர்களா? என்று கேட்ட போதெல்லாம் அவ்வாறான நோக்கம் தன்னிடம் இல்லையென மறுத்தார். கடந்த தேர்தல் காலத்தில், தேர்தல் முடிந்த பின்னர் உங்களை வெளிநாட்டு தூதுவராக நான் அனுப்ப ஆசைப்படுகின்றேன் என அவரிடம் வாக்குறுதியளித்தேன். அந்த வாக்குறுதி இன்று நிறைவேறியிருப்பது பெரு மகிழ்ச்சி தருகின்றது. அதற்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிப்பதோடு, அரசாங்கத்துக்கும் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகம்மது தலைமை வகித்தார். எம்.பிக்களான மஹ்ரூப், இஷாக், முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலி​ங்கம், டொக்டர் ஷாபி ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கலாநிதிகளான அசீஸ், யூசுப் மரைக்கார், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைதீன், மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன், தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான், அமைச்சரின் பொது சனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன், முபாறக் மௌலவி, வவுனியா ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ஜூனைத் மௌலவி, அமைச்சரின் இணைப்பாளர்களான பாரி, முஜாஹிர், மௌசூம் ஹாஜியார், றயீஸ் ஹாஜியார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுஐப் எம். காசிம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *