அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக றிஷாத் பதியதீன் ஜனாதிபதியால் நியமனம்

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்தல், அசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும், இந்த மூன்று மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்குபடுத்தல், அவதானித்தல் மற்றும் பணிகளுக்கான அனுமதியை வழங்கல் என்பன இந்தத் தலைமைத்துவத்தின் பணிகளாகும் என ஜனாதிபதி வழங்கியுள்ள இந்த நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான அறிவித்தல் கடிதங்கள், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்தினாலும் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருந்து செயற்பட்டு வந்துள்ளார். பிரதேச அபிவிருத்திக்கான அனைத்து அங்கீகாரமும் அராலேயே வழங்கப்பட்டு வந்துள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.