ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
இதில் ஒப்பந்தம் ஏற்பட்டு, ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டியது வரும்.
ஆனால், ஈரானுடன் செய்துகொள்கிற ஒப்பந்தத்தை அமெரிக்க பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு ஒபாமா அனுப்ப வேண்டும், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை ரத்து செய்தால், அதை 60 நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறுகிற சட்ட மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மசோதாவை தனது வீட்டோ அதிகாரத்தை (மறுப்பு ஓட்டு) பயன்படுத்தி ரத்து செய்ய ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் பெர்னாடெட் மீஹன் கூறுகையில், ‘‘ஈரானுக்கு எதிராக கூடுதல் சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுவல்ல என்று ஜனாதிபதி உறுதிபட கருதுகிறார். இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டால், அவர் அதில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவார்’’ என்றார்.