துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
அல்லாஹ் குர் ஆனில் தான் நாடியதைத் தவிர வேறு எதுவும் உலகில் நடக்காது என்ற கருத்துப்பட பல இடங்களில் குறிப்பிடுகிறான்.அவ்வாறானால் உலகில் அனாச்சாரங்கள் அரங்கேறாமல் தடுத்து உலகத்தினை ஒரு சீராக வைத்திருக்கலாமே என்ற வினா எழலாம்.வெளிப் பார்வையில் பார்க்கும் போது இது சரி போன்று விளங்கினாலும் நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இதற்கான தெளிவினை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவனுக்கு நல்லது கெட்டது எது என பகுத்துணரும் ஆற்றலினை வழங்கி,நல்லது கேட்டதினை தெளிவு படுத்த காலத்திற்குக் காலம் வேதங்களினையும்,நபிமார்களினையும்,ரசூல் மார்களையும் இவ் உலகிற்கு அனுப்பி மனிதனிற்கு தேவையான பூரண வழிகாட்டலையும் வழங்கியுள்ளான்.மேலும்,பாவம் செய்யாமல் தடுக்க நரகத்தின் மீதான அச்சத்தினை ஏற்படுத்தி,நன்மையான காரியங்களினை மக்கள் செய்யத் தூண்ட சுவனத்தின் மீதான ஆசையினை ஏற்படுத்தும் வழி வகைகளினையும் செய்துள்ளான்.அதாவது நல்லது கெட்டது என அறிய வைத்து அதனை விளக்க ஏற்பாடுகளினையும் செய்து அதனை அடைய ஆசையூட்டியும் உள்ளான்.இதன் பிறகும் நாம் தவறு செய்தால் யார் தவறு? எம் தவறா? அல்லது இறைவன் தவறா?
இறைவன் நல்லது கெட்டது எது என அறியும் ஆற்றலினை மனிதனுக்கு வழங்கியுள்ளான்.ஒரு விடயத்தினை செய்வதா? தவிர்ந்து கொள்வதா? என்பதனை முடிவெடுக்கும் ஆற்றல் மனிதனிடமே வைத்துள்ளான்.மனிதன் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அது இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள ஆற்றல் கொண்டே மனிதன் உலகில் செயற்படப் போகிறான்.அதற்காக மனிதன் தான் நினைத்ததை நினைத்த போது செய்யலாம் எனக் கொள்ள முடியாது.இறைவன் நாடினால் மனிதன் ஒருவன் செய்ய நினைப்பதை செய்யாமல் தடுக்கும் ஆற்றலும் அவனிடம் உள்ளது.
இது ஒரு குழப்பமாக இருந்தால் இதனை ஒரு உதாரணம் மூலம் அறியலாம் என நம்புகிறேன்.இன்று பல மென் பொருட்கள்(softwares) உள்ளன. இதில் மனிதன் எவ்வாறு புரோகிராம் எழுதுகிறானோ அதன் படியே அந்த மென் பொருள் இயங்கப் போகிறது.இதனைப் போன்றே மனிதனுக்கு இறைவன் செய்து வைத்துள்ள புரோகிராம் அவன் விரும்பும் பிரகாரம் இயங்குவது.அதற்காக அந்த மென் பொருளில் நாம் மாற்றம் உண்டு பண்ண நினைத்தால் மாற்றம் பண்ணல்லாம்.இவ்வாறே இறைவன் தான் நினைத்தால் மனிதனுக்கு செய்யப்பட்ட புரோகிராமை மாறுவான்.இறைவன் தான் நினைத்தாலே அவ் விடயம் நடக்கப் போகிறது.எனவே,இவ் உதாரணத்தினை இறைவனின் ஆற்றலோடு ஒப்பிட்டால் தெளிவு பெற முடியும்.
மேலும்,அல்லாஹ் குர் ஆனில் “நீங்கள் இந்தக் குர் ஆனை ஆராய வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்புகிறான்.இது பல விடயங்களினைச் சுட்டி காட்டுகின்ற போதும் இது சுட்டிக் காட்டும் மிக முக்கியமான ஒன்று “ஆராய்வோருக்கு இது வழி காட்டும்”என்பதாகும் இது அல்லாஹ் மனிதனின் பகுத்துணர்வில் தெளிவினை வைத்துள்ளான் என்பதனை அறியலாம்.
மேலும்,அல்லாஹ் பல இடங்களில் தன்னை வணங்குமாறு கட்டளை இடுகிறான்.ஆனால்,அல்லாஹ்விடம் கேட்பவனுக்கு மாத்திரம் அல்லாஹ் வழங்குவதில்லை.அவனிடம் கேட்காதவனுக்கும் அல்லாஹ் இவ் உலகில் அவனது முயற்சிக்கு பலனைக் கொடுத்துக் கொண்டே உள்ளான்.இது மனிதனின் பகுத்தறிவின் படி அல்லாஹ் மனிதனை செயற்பட வைத்துள்ளான் என்பதற்கு போதுமான சான்றாகும்.எனினும்,நலவு செய்தால் அந்த நல்வினை அவன் மறுமையில் கண்டு கொள்வான் தீமை செய்தால் தீமையினை மறுமையிலே கண்டு கொள்வான்.
இறைவன் ஏன் மனிதனைப் படைத்தான் என்பதனை அறிவது மேலுள்ள கேள்விக்கான ஒரு தெளிவான பதிலை வழங்கும் என நம்புகிறேன்.
(நபியே) இன்னும்,உம் இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறிய போது அவர்கள் “(இறைவா) நீ அதில் குழப்பதை உண்டாக்கி இரத்தம் சித்துவோரையா அமைக்கப் போகிறாய்? இன்னும் நாங்களே உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து ,உன் பரி சுத்தத்தினை போற்றியவர்களாக இருக்கின்றோம்” எனக் கூறினர்.இதற்கு அல்லாஹ் “நீங்கள் அறியாதவற்யெல்லாம் நான் அறிவேன் எனக் கூறினான்.”இவ் குர்ஆன் வசனங்கள் மனிதன் உலகில் குழப்பம் செய்வான் என்பதை தெளிவாக்குகிறது.அல்லாஹ் இன்னுமொரு குர்ஆன் வசனத்தில் “இன்னும்,ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணகுங்வதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை (அல் குர்ஆன் 51:56)” எனவும் குறிப்பிடுகிறான்.
இவ் இரண்டினையும் வைத்து ஆராயும் போது குழப்பம் செய்ய இயலுமான குணம் கொண்ட மனிதன் அதனை இறைவனுக்காக தவிர்ந்து அல்லாஹ்வினை வணங்க வேண்டும் என்பதனை அறியலாம்.இப்படி இருக்க மனிதனை பாவாமல் செய்யாமல் தடுத்தால் இறைவன் மனிதனைப் படைத்த நோக்கம் பிழையாகிவிடும்.