மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் வழங்கப்படாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ´சவுத் சைனா மார்னிங் போஸ்ட்´ என்ற ஹாங்காங் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,
‘கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திடம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த எந்த பதிவுகளோ, சாத்திய ஆய்வு குறித்த அறிக்கைகளோ, அரசாங்கம் அங்கீகாரம் அளித்தமைக்கான ஆவணங்களோ இல்லை.
இவற்றை அவர்கள் செய்யத் தவறியதால் தான், ஏதாவது ஆவணங்கள் இருந்தால் அதைச் சமர்ப்பியுங்கள் என்று அவர்களிடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். இந்த நிறுவனம் ஏனைய நாடுகளில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்தியப் பெருங்கடலில் குதித்து, அதை நிரவ முடியாது. இதுபோன்ற திட்டங்கள் குறித்து நாங்கள் சீனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. சீனாவுடனான எமது உறவுகள் 1950களை நோக்கிப் பின்சென்றுள்ளது.
வேறெந்த முதலீடுகளையும் விட சீனாவின் முதலீடு நல்லது. ஆனால் அதற்காக அவர்களுக்கு முன்னுரிமை வசதிகளை அளிக்க முடியாது. முன்னைய அரசாங்கம் வழங்கியது போன்ற சலுகைகளைக் கோரிக் கொண்டு நீங்கள் இங்கு வரமுடியாது.
இவை சீனாவின் முதலீடுகள் இல்லை. இவை கடன்கள். இவற்றை திருப்பிச் நாங்கள் செலுத்த வேண்டும். எமது அரசாங்கம் இந்த கடன்கள் தொடர்பாக சீனாவுடன் மீளப் பேச முயற்சிக்கிறது. நாங்கள் சீனாவிடம் கேட்பது என்னவென்றால், தயவுசெய்து எமக்கு உதவுங்கள் என்பதைத் தான்.
புதிய அரசாங்கம் சீனாவை மட்டும் இலக்கு வைத்துச் செயற்படவில்லை. முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு சீனா உதவ வேண்டும். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஊழலை ஒழிக்க எதைச் செய்தாரோ, அதையே தான் இலங்கையும் செய்ய முயற்சிக்கிறது.
நாம் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல் உடன்பாடுகளைச் செய்து கொண்ட சீன நிறுவனங்களுக்கு எதிரானவர்கள். அவை வரி செலுத்துவோரின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இங்குள்ள சீன நிறுவனங்களின் செயற்பாடுகளை சீன அரசாங்கம் அறியாமல் இருந்திருக்கக் கூடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.