சுதந்திர இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.
முப்படையின் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு ஒத்ததாக கருதப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சரத் பொன்சேகாவின் பறிக்கப்பட்ட சகல உரிமைகளும் மீள வழங்கப்பட்டது.
இதேவேளை, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்ட ஒருவரால் அரசியலில் ஈடுபடமுடியாது என மனித உரிமை ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி பிரதிபா மகாநாம தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது செயற்பட்ட நால்வருக்கே இதுவரை பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து முழு எதிரிகளையும் அழித்த இராணுவ படைக்கு தலைமை தாங்கிய நபர்களுக்கு இந்த கெளரவ பதவி வழங்கப்படுகிறது.