நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவென விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை இவ்வாரத்திற்குள் அமைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு ஏற்ப தாம் இந்நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் போது பட்டம், பதவிகள், தராதரங்கள், அரசியல் கட்சி பேதங்கள் எதுவும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பொதுச்சொத்துக்களை அழித்தவர்கள், அரச சொத்துக்களை களவாடியவர்கள், கொள்ளையில் ஈடுபட்டவர்கள போன்றோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொலன்னறுவை அரலகங்வில பொதுச் சந்தை வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து கடந்த தேர்தல் காலத்தில் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை குறித்து நடவடிக்கை எடுப்பது தாமதமாகியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, அது தமக்கும் பிரச்சினையாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தற்போது ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.