Breaking
Thu. Mar 20th, 2025

ஊவா மாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் (செப்டம்பர் மாதம்) 20ஆம் திகதி நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் தேர்தல் கால அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து நேற்று பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே, ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் மொனராகலை மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவாது அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக பொலிஸ்மா அதிபர் தேர்தல்கள் ஆணை யாளருக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அதிகளவு பொலிஸாரை அப்பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்த புதிய இடங்களில் பாதை தடைகளை அமைத்து பஸ் வண்டி, லொறி மற்றும் கொள்கலன் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களையும் நாள் முழுவதும் சோதனையிடுவதற்கும் பொலிஸ் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக மொனராகலை மாவட்டத்துக்கென வெளி மாவட்டங்களிலிருந்து பொலிஸாரை அழைத்து கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

இச்சந்திப்பு நேற்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது. இதில் சப்ரகமுவ, ஊவா மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள், பதுளை, மொனராகலை தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வருகை தந்திருந்த கட்சி பிரதிநிதிகள் தேர்தல் ஒத்திவைப்பதனை விரும்பாதமையால் திட்டமிட்டபடியே 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவதாக ஆணையாளர் முடிவு செய்துள்ளார்.

எனினும், நிலைமை அசாதாரணமாக இருந்தால் தேர்தல்கள் ஆணையாளர் என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Post