Breaking
Sat. Jun 21st, 2025

ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை கொன்றவர்களை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி கூறியுள்ளார்.  ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் (55). அதிபர் புடினின் நிர்வாகத்தில் ஏராளமான  முறைகேடுகள் நடைபெற்று வருவதாக போரிஸ் நெமட்சோவ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. மக்களை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்காமல், உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் கண்டன குரல் எழுப்பினார்.

இதுதொடர்பாக, இன்று காலை கிரெம்ளின் மாளிகை செஞ்சதுக்கத்தில் மக்கள் பேரணி நடத்தப் போவதாக ஏற்கெனவே நெமட்சோவ் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிரெம்ளின் மாளிகை அருகே மேம்பாலத்தில் நெமட்சோவ் நடந்து சென்றபோது, ஒரு காரில் வந்த மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டது. இதில் அவர் பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து, மாஸ்கோ நகரில் நேற்று பெரும் பதட்டம் ஏற்பட்டது.

மாஸ்கோ மேம்பாலத்தில் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் நேற்று காலை முதல் ஏராளமான மக்களும் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் எனது 15 ஆண்டு கால ஆட்சியில் அங்கம் வகித்தவருமான போரிஸ் நெமட்சோவ் சுட்டு கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது. அவரது கொலை குறித்து விசாரணை நடைபெறுகிறது. இக்கொலையில் தொடர்பானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று நெமட்சோவ்வின் தாய் டினா எய்ட்மானுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

Related Post