தான் எந்தவொரு அரசியல் குழுவுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால் அனைத்து மக்களுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற 3 மாவட்டங்களிலும் மேற்கொள்ளும் அபிவிருத்தியை 100 நாள் திட்டத்தின் கீழ் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பணிப்புரை வழங்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அதிகாரிகளை பணித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.