Breaking
Thu. Jun 19th, 2025

தென்கிழக்காசியாவின் மிகப் பிரதான நகர மையமாக கொழும்பு அமையப்போகின்றது எனக் குறிப்பிட்ட, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நகரமயமாக்களைப் பொறுத்தவரை வெளிப்படைத் தன்மை பேணப்படுவதோடு, தொழில்சார் திறமைகளுக்கேற்ப உரிய இடமளிப்பதற்கும், தனியார் துறை பங்களிப்புகளுக்கு வாய்ப்பளிப்பதற்கும் தனது அமைச்சு நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.

கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் செயலமர்வின் 2015ஆம் ஆண்டுக்கான அங்குரார்பண நிகழ்வு கொழும்பு, பண்டநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் செவ்வாய்கிழமை (17) மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, இலங்கை கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் தலைவி சித்ரா வடிஹக்கார ஆகியோரும் உரையாற்றினர். இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பண்டநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மாபெரும் கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் கண்காட்சியோடு இணைந்ததாக நடைபெற்ற அங்குரார்பண நிகழ்வில் பிரதான உரையை ஆற்றிய போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது.

துரிதமாக நகரமயமாகி வரும் இலங்கையின் எதிர்காலத்தை பொறுத்தவரை ஒழுங்கமைக்கப்பட்ட, நியாயமாகப் பகிர்ந்தளிக்கக்கூடிய, நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது.

கொழும்பு நகரையும், நகரை அண்டிய பிரதேசங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், பொது இடங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் அண்மைக்காலமாக அதிக பிரயர்த்தனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் கண்ட கொழும்பு வேறு; இன்று நாம் காணும் கொழும்பு வேறு. அந்தளவுக்கு நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனது அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக கொழும்பு மட்டுமல்லாது, நாட்டின் ஏனைய பல பிரதான நகரங்களும் துரித கதியில் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன.

2030ஆம் ஆண்டை நெருங்கும் பொழுது 84 இலட்சம் மக்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான காணிகளுக்கான தேவைப்பாடு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் ஏற்படும். புதிய அரசாங்கத்தின் கவனத்தை இது ஈர்த்துள்ளது.

இலங்கை, தரமான, அனுபவமிக்க கட்டடக் கலைஞர்களையும், பொறியலாளர்களையும் ஏனைய துறைசார் நிபுணர்களையும் தன்னகத்தை கொண்ட நாடு என்பது நாம் பெருமைப்படத்தக்க விடயமாகும் என்றார்.

‘ஆகாயத்தோடு உரையாடுதல்’ என்ற தொனிப்பொருளில் தற்பொழுது கொழும்பில் இடம்பெற்று வரும் இவ்வாண்டுக்கான கட்டடக் கலைஞர் நிறுவன கண்காட்சியை 1,20,000க்கு அதிகமான மக்கள் கண்டு கழிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.;
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

Related Post