Breaking
Sun. Jun 15th, 2025

டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர்.

இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது.

பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கற்பழிப்பு கொலை குற்றவாளியை பேட்டி எடுக்க அனுமதித்ததை கண்டித்து டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து டெல்லி பொலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே இந்த பேட்டியை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை நேற்று இரவு வெளியிட்டது.

பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி இன்று காலையில் லண்டன் தொலைக்காட்சியில் இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணப்படம் அவமானமல்ல; அதன் மீதான தடையே அவமானம்” பி.பி.சி

இந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் எங்கும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்த இந்திய அரசு, அந்த காணொளியை யூடியூபிலும் நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், அதன் விலைவாக அந்த காணொளி யூடியூபில் இருந்து நீக்கப்ப்படுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆவணப்படத்துக்கு எதிரான இந்திய அரசின் இந்த தடை முயற்சிகள் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்ததை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு மட்டங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவுக்குள் இந்த ஆவணப்படம் தடுக்கப்படுவதற்கு முன்பாக இந்த ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்த இந்தியாவின் ஆவணப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பெண்ணியவாதியான லீனா மணிமேகலை, பிபிசியின் இந்த ஆவணப்படத்தைவிட, இந்திய அரசு அதை தடுத்திருக்கும் செயலே இந்தியர்களுக்கு பெரிய தலைக்குனிவைத் தேடித்தந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேசமயம், இந்த குறிப்பிட்ட ஆவணப்படத்தின் மீது தமக்கு பல்வேறுவகையான விமர்சனங்கள் இருப்பதாக தெரிவித்த லீனா மணிமேகலை, இந்த ஆவணப்படம் செய்திகளை மீண்டும் தொகுத்துத் தந்திருக்கிற ஒரு செய்தித்தொகுப்பாக மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் பாலியல் வல்லுறவு பிரச்சனையின் பன்முக காரணிகளை இந்த ஆவணப்படம் பேசத்தவறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தனது பார்வையில் இந்த ஆவணப்படம் இந்தியாவின் பாலியல் பலாத்கார பிரச்சனையை வெறும் தட்டையான ஒற்றைப்பார்வையில் பார்ப்பதாக விமர்சித்த லீனா மணிமேகலை, அதே சமயம் அதை தடை செய்ததன் மூலம் இந்திய அரசு ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

Related Post