மன்னார் நிருபர்
“மருதமடு கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோறிக்கைகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்துவேன்” என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மருதமடு அரசினர் கலவன் தமிழ் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதேச அரசியல் பிரதி நிதிகள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,
“கடந்த காலங்களில் கல்விப் பணிப்பாளர் இங்குள்ள பாடசாலைகளின் தேவைகள் தொடர்பில் எம்மிடம் விடுக்கும் வேண்டுகோள்களை நாம் நிறைவு செய்து கொடுத்துள்ளோம். இதில் முஸ்லிம், தமிழ், பாடசாலை என்ற பார்வை எம்மிடமிருந்ததில்லை.
மாணவ சமூகத்திற்கு சீரான கல்வியினை பெற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமையாகும். அந்த ஆசிரிய சமூகத்தினால் தான் இன்று எத்தனையோ உயர் பதவிகளை பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கின்றது என்பதையும்,மாணவர்கள் மறந்து விடக் கூடாது.
இந்த பாடசாலை அதிபர் இம்மக்களது பல்வேறு தேவைகள் தொடர்பில் எம்மிடம் கோறிக்கையினை முன் வைத்துள்ளார். எனக்கு ஞாபகமிருக்கின்றது, இந்த பிரதேச மக்களின் பல தேவைகள் தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்.
எதிர்காலத்திலும் நீங்கள் ஒற்றுமையுடன் இருப்பதன் மூலம் இன்னும் பல அபிவிருத்திகளை எமது கிராமங்களுக்கு கொண்டுவர முடியும்” என்றும் கூறினார்.
பாடசாலை மாணவர்களுக்கு தேவையான புத்தகப் பைகளையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு வழங்கி வைத்தார்.