Breaking
Fri. Jun 20th, 2025

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்படும் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமியின் உடலை மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன என்று சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளது என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் கொழும்புத் தலைமைக் காரியாலயம் கூறியிருந்தது.
ஆயினும் சிறுமியின் உயிரிழப்புக்கு இருதயம் மற்றும் மூளை தொடர்பான பாதிப்பே காரணம் என்று வைத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் கூறியிருந்தனர்.
இவற்றையடுத்து, கொல்லப்பளியங்குளம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட குறித்த சிறுமியின் உடலை எதிர்வரும் 6 ஆம் திகதி தோண்டி எடுத்து, மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ராமகமலன் பொலிஸாருக் உத்தரவிட்டார்.
கடந்த 27 ஆம் திகதி தொண்டையால் நீர் இறங்கவில்லை என்று தெரிவித்து அயல் வீட்டைச் சேர்ந்தோரால் குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் உயிரிழந்தார். சிறுமியின் இறப்பில் அவரது பாட்டியும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாதர் சங்கத்தினரும் சந்தேகம் வெளியிட்டனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாலேயே உயிரிழந்தார் என்று அவர்கள் கூறினார்கள்.
அந்தக் குற்றச்சாட்டுக் குறித்து நடவடிக்கை எடுக்காத கனகராயன்குளம் பொலிஸார், சட்ட வைத்திய அறிக்கை கிடைத்த பின்னரே அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறிவந்தனர். கடந்த 17ஆம் திகதி சட்ட வைத்திய அறிக்கை கிடைத்தது. அதில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் கொழும்பு தலைமைக் காரியாலயம் கூறியது. அதையடுத்தே நீதிமன்றம் பொலிஸாருக்கு மேற்குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Related Post