கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் – றிஷாத் பதியுதீன்

கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை
அமைச்சரும்.தமிழ் மக்கள் எம்மோடு இருக்கின்றார்கள் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் இன ரீதியான சாயத்தை எம்மீது பூசுகின்றனர் என்றும் கூறினார்.
வவுனியா வெளிக்குளம் கிருபை இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போத அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் –
வன்னி மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லிம்,சிங்கள மக்கள் எம்மை அவர்களது பிரதி நிதியாக தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர்.இம்மக்களது எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை அறிந்து அவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் என்ற வகையில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து அதனை செய்துவருகின்றேன்.
இந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களின் தேவைகளை விட வித்தியாசமானவர்கள்.யுத்தம் காவு கொண்ட பிரதேசம் என்பதால் அரசியல் வாதி என்ற வகையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.அந்த வகையில் பாதைகள்,மின்சாரம்,வீடமைப்பு வசதிகள் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ பணிகளை ஆற்றியுள்ளேன்.
எம்மால் இந்த மக்களுக்கு ஆற்றுகின்ற பணிகளால் இன்று இந்த மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து எமது அணியுடன் இணைந்து  வருகின்றனர்.இதன் மூலம் எமது செல்வாக்கு அதிகரித்துவிடும் என்ற அச்சத்தால் சில அரசியல்வாதிகள்  எமக்கு எதிராக பிழையான தகவல்களை ஊடகங்கள் மூலம் வெளியிடுகின்றனர்.வவுனியா மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கே அதிகமாக வீடுகளை வழங்கியுள்ளதாக பொய்யான தகவல்களை கூறிவருகின்றனர்.இன்னும் எத்தனையோ ஆயிரம் மக்களுக்கு வீடுகள் தேவையாக  உள்ளது.அவ்வாறு இருக்கின்ற போது முஸ்லிம்களுக்கு 120 சதவீதமான வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பதன் யதார்த்தம் என்ன என கேட்க விரும்புகின்றேன்.
தேவையுள்ளவர்கள் யார் என்று தான் நாம் பார்க்கின்றோம்.அது எந்ந சமூகம் என்று நாம் பார்ப்பதில்லை.முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்து மெனிக்பார்ம் முகாமுக்கு வந்த மக்களது தேவைகள் தொடர்பில் அன்று நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது முழுமையான உதவிகளை செய்தேன்.அதே போல் அவர்கள சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்தோம்.ஆனால் சில அரசியல்வாதிகள் தமதுஅரசியல் இருப்பினை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக முல்லைத்தீவுக்கு மீள்குடியேறச் சென்ற முஸ்லிம்கள்   தமிழ் மக்களது வீடுகளை எரித்துவிட்டார்கள் என்று பிழையான அனுகுமுறையினை கையாண்டனர்.
நான் எதனை இங்கு சொல்ல வருகின்றேன் என்றால்.நாங்எகள் மனிதர்கள் மதங்கள் எல்லோரையும் சமமாக மதிக்குமாறு கூறுகின்றது.நான் பின்பற்றும் இஸ்லாம் மதம் எல்லா நிலைகளிலும் அதனை வலியுறுத்துகின்றது.அண்டை வீட்டான் பசித்திருக்கின்ற போது நாம் மட்டும் வயிறு புடைக்க சாப்பிடுவதை எமது மார்க்கம் ஒரு போதும் அனுமதித்தில்லை.பசித்தவனுக்கு உணவு வழங்க வேண்டும,கற்பதற்கு பாடசாலை தேவையா அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும் இது போன்று தான் எல்லா விடயங்களிம் எமது பங்களிப்பு இருக்க வேண்டும்.
இன்றை இந்த நிகழ்வ மிகவும் மன மகிழ்வினை தருகின்றது.நாம் அனைவரும் ஓரணியில் நின்று இந்த மாவட்டத்தினதும்,மக்களினதும் அபிவிருத்திக்கு எதனை செய்ய முடியுமோ அதனை மனித நேயத்துடன் செய்வதற்கான சந்தரப்பம் கிட்டியுள்ளது அதற்கு நீங்கள் வழங்கும் பங்களிப்பு பெறுமதியானது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்.