Breaking
Sat. Jun 21st, 2025

சஜின் டி வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட விமான நிறுவனம் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் வெளியிட்ட தகவல்களுக்கு அமைய, குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரக்கு விமானம் தொடர்பிலேயே அந்த அறிக்கையில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போயிங் 727 ரக சரக்கு விமானம் நீண்டகாலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த காலங்களில் நாம் அறிக்கையிட்டிருந்தோம்.

இந்த விமானத்தைப் பயன்படுத்தி, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துடன் சார்க் வலயத்தில் சரக்குகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சஜின் டி வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமானது என கூறப்படும் கொஸ்மோஸ் விமான நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விமானம் குத்தகை அடிப்படையில் சரக்கு போக்குவரத்திற்காக வேறொரு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என கொஸ்மோஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் வஜிர காலிங்க தெரிவித்தார்.

இந்த விமானத்தினை பயணிகள் போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாதென அவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் நிறுவனத்திற்கும், தமக்கும் இடையில் காணப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி இரத்துசெய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமானம் வர்த்தகக்கடன் அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொஸ்மோஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் விமானத்தின் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த போயிங் விமானம் பயணிகள் விமானம் என நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை. அந்த விமானம் ஏரோ லங்கா என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது என துறைமுகம், கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த விமானம், விமான நிலையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் கடந்த காலங்களில் செலுத்தப்படவில்லை என்பது இதன்மூலம் வெளியாகியிருந்தது.

இந்த விமானத்தின் உரிமை மற்றும் அது நீண்டகாலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலேயே நாம் கேள்வியெழுப்பியிருந்தோம்.

Related Post