அஸ்ரப் ஏ சமத்
சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 18வது மாநாடு நேற்று கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு நாடுபூராவும் உள்ள 2000 சமுர்த்தி,திவிநகும, சமுர்ததி வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதியமைச்சர் எம்.எம். எஸ் அமீர் அலியும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது இந்த சங்கத்திற்காக தனது சொந்த நிதியில் ஒர் இலட்சம் ருபாவை அமைச்சர் சஜித் அன்பளிப்புச் செய்தார்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் அமீர் அலி – முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மகன் சஜீத்தின் பிரதியமைச்சராக கிடைத்தமையிட்டு எனக்கு கிடைத்த பாக்கியம் எனக் கருதுகின்றேன். அவரின் தந்தை ரணசிங்க பிரேமாதாசவின் சிந்தனையில் அவர் அமைச்சில் 24 மணித்தியாலயமும் அதிகாரிகள், பொதுமக்கள், தொழிற்சங்கங்களோடு மணித்தியாலயக் கணக்கில் கதைத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை பெற்றுக் கொடுப்பவராக அமைச்சர் சஜித் பிரேமதாச விளங்குகின்றார்.
இந்த நாட்டில் 27 இலட்சம் சமுர்த்தி மற்றும் திவிநகும் திட்டத்தில் நிவாரணம் பெறும் மக்களுக்காக கடந்த 19 வருட காலமாக சேவைசெய்து வரும் சமுர்த்தி அதிகாரிகள் ஒரு மாபெரும் சக்தியாக இந்த நாட்டில் திகழுகின்றீர்கள்.
இந்த நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களது வாழ்க்கையின் எழுச்சிக்காக நீங்கள் தன்னையே அரப்பணித்து வருகின்றீர்கள். ஆகவே அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அவரின் புதிய தரிசனத்திற்கு நானும் சேவையாற்றுவேன் என பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.