இலங்கையர்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யெமனியர் ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது உடமைகளை கொள்ளையடித்தமை தொடர்பில் இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தண்டனையை குறைப்பது அல்லது நீக்குவது குறித்து தொடர்ந்தும் சவூதி அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
சவூதி நீதிமன்றில் குறித்த மூவர் மீதான கொலை, கொள்ளைக் குற்றச் சாட்டுக்கள் ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இரத்தப் பணத்தினையோ அல்லது நட்ட ஈட்டினையோ வழங்கி தப்பிக்கொள்ள முடியுமானதாக இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாஹோ, ராகமை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவருக்கே சவுதி அரேபிய நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த 10 வருடங்களாக குறித்த குற்றச் சாட்டுக்களின் கீழ் இந்த மூவரும் சவூதி அரேபிய சிறையில் இருந்து வந்துள்ள நிலையில் கடந்த வாரமளவில் இவர்களுக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பு உறுதியாகியுள்ளது.
இது குறித்து தொடர்ந்தும் தகவல் தெரிவித்த பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா,
இந்த மூவருக்கும் எதிரான தண்டனையை குறைக்க அல்லது இரத்துச் செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது. அண்மையில் ஜனாதிபதியின் விஷேட பிரதி நிதியாக சவூதி சென்று அங்கு மன்னரை சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடாகவும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்புகள் இரண்டு விதமானவை. ஒன்று பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்ட ஈட்டினையோ இரத்தப்பணத்தினையோ அல்லது அவர்களது மன்னிப்பினையோ பெற்று விடுதலை பெற முடியுமானது. மற்றது மிகப் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் மரண தண்டனையாகும். எனினும் இவ்வகையிலான மரண தண்டனைகளின் போது இரத்தப்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் மன்னிப்பெல்லாம் சாத்தியமற்றது. இந் நிலையிலேயே நாம் சவூதி அரசுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்.
இந் நிலையில் இது குறித்த தேவையான அனைத்து ஆவணங்களையும் சவூதி அரேபிய தூதரகம் ஊடாக அந் நாட்டு அரசிடம் நாம் கையளித்து தேவையான நடவ்டிக்கைகளை முன்னெடுக்க ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம். இவர்கள் சார்பில் செய்யப்பட்ட மேன் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இறுதிக் கட்ட முயற்சிகளாக அந் நாட்டு மன்னர் உள்ளிட்ட அரச தரப்பிடம் பேசி வருகின்றோம் என்றார்.