Breaking
Sat. Jun 21st, 2025
இரண்டு சவுதி இளைஞர்களுக்கு வேலை எதுவும் இல்லாததால் நேரத்தைப் போக்க தங்கள் வீட்டு நான்கு சக்கர வாகனத்தில் ஏறி ஒரு நாயை விரட்டிக் கொண்டு சென்றுள்ளனர். விரட்டியதோடு அல்லாமல் 10க்கும் மேற்பட்ட முறை அந்த நாயை வாகனத்தில் மோதவிட்டு அது வலியில் குலைப்பதை ரசித்துள்ளனர். முடிவில் அந்த நாய் இறக்கும் வரை தொல்லைபடுத்தியிருக்கின்றனர். ஒருவன் காரை ஓட்ட மற்றொருவன் தனது மொபைலில் அதனை படமாக பிடித்துள்ளான். படமாக எடுத்ததோடு மட்டுமல்லாது அதனை இணைய தளத்திலும் பரவ விட்டுள்ளான்.
இது பல இடங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மனிதாபிமானம் உள்ள எவனும் இது போன்ற ஒரு கொடூரத்தை செய்ய துணிய மாட்டான். சம்பந்தப்பட்ட அந்த வாகனத்தின் எண் தெளிவாக அந்த படத்தில் உள்ளதால் குறிப்பிட்ட அந்த இருவரையும் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்கள் இருவருக்கும் ஐந்து வருட சிறை தண்டனையோ அல்லது ஐந்து லட்சம் ரியால் அபராத தொகையோ கட்ட வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது.
விவசாய துறையைச் சேர்ந்த ஜாபர் அல் சஹ்ரி சொல்லும் போது ‘அந்த நாய் இறக்கும் வரை கொடுமைபடுத்தியுள்ளனர் அந்த இருவரும். இது சவுதி சட்டத்தின்படி கடுமையான குற்றம். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. அதனை மீறியதால் அந்த இளைஞர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுள்ளனர்’ என்றார்.
அரப் நியூஸ்
“ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. வழியில் அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். அதிலிருந்து தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் தவித்து ஈரமண்ணை நக்கி உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘எனக்கு ஏற்பட்டது போன்ற கடும் தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்’ என்று தன் மனத்திற்குள் கூறினார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி மேலே கொண்டு வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ், அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் மற்றுமுள்ள பிராணிகள் விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்குக் கருணை காட்டினால் உங்களுக்குப் பிரதிபலன் உண்டு” என்று பதிலளித்தார்கள்.
அறிவித்தவர்: நபித் தோழர் அபு ஹூரைரா
ஆதார நூல்: புஹாரி 2466, Book : 46
சுவனப் பிரியன்

Related Post