“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்கிற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை கொண்டே தான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்தியப் பிரதமர், பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவும், இலங்கையும் அண்மையில் இருக்கின்ற நாடுகள் என்கிற வகையில் மதம், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்களில் ஒற்றுமையுள்ளவை. அதுபோல, ஒரே காலத்திலேயே இரு நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் அபிவிருத்தி, எம்மை (இந்தியாவை) பெருமைகொள்ள செய்துள்ளது. உலக பொருளாதாரத்தில் பிரதான பங்காளராக எம்மை (இந்தியாவை) உலகமே பார்த்தது. அந்த பெறுபேற்றின் பங்காளராக இலங்கையையும் சேர்ப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம். தெற்காசியாவின் அபிவிருத்தியில் பிரதான இயந்திரமாக இலங்கையும் இந்தியாவும் இருக்கவேண்டும்.
புத்தர் ஞானம் பெற்ற இடமே நான் பிறந்த மண்ணாகும். எங்களுடைய இருநாடுகளின் பாதுகாப்பு எமது இருப்புக்கு அத்தியாவசியமானது. சமுத்திர பாதுகாப்பு அதில் முக்கியமானதாகும். அபிவிருத்தியிலும் அனர்த்தத்திலும் கைகோர்ப்பதற்கான பலம் எம்மிருநாடுகளுக்கும் இருக்கவேண்டும்.
எங்களுடைய பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் அழுத்தம் கொடுக்கும் காரணங்களை கண்டறியவேண்டும். அதேபோல பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைமையை உருவாக்குவதற்கும் நாம் இடமளிக்ககூடாது. இலங்கை, மாலைதீவு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தவேண்டும். சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பளிப்பது எங்களுடைய பொறுப்பாகும்.” என்றுள்ளார்.