Breaking
Fri. Mar 21st, 2025

 (அபூ ஷஹ்மா)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி பகுதியில் 9 வயது சிறுமி அயலவர் ஒருவரால் கொலை செய்யப்பட்டு பேக் ஒன்றால் கட்டி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவர் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஜின்னா வீதி, எம்.ஆர்.சஹாப்தீன் பாத்திமா சீமா எனும் 9 வயது சிறுமி என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று (10) புதன்கிழமை பிற்பகல் சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது குறித்த சிறுமியின் ஜனாசா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இஹலவல, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர, பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உட்பட பெரும் திரளான பொது மக்கள் வருகை தந்திருந்தனர்.

இச் சிறுமியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேக நபரை பொலிசார் தேடிவருவதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரீசோதனையின் பின்னர் சிறுமியின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும்.

இச்சிறுமி காத்தான்குடி சாவியா வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post