Breaking
Fri. Mar 21st, 2025

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழுகின்றன. ஆயினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை சட்டத்தில் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம், கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிகாலம் 2016ஆம் ஆண்டே நிறைவடையவுள்ளது. இந்நிலையிலே பல எதிர்பார்ப்புகளை குழப்புவதற்காகவோ இன்றேல், வேறு எதற்காகவோ, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா புதியதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.

18ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்த ஒருவர் 3ஆவது தடவையாகவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்தப் புதிய கருத்தாகும்.

18ஆம் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய இரண்டாம் பதவிக் காலத்தை ஆரம்பித்து விட்ட காரணத்தினாலே, அவர் ஆரம்பித்த வேளையிலே, அது அவருடைய இரண்டாம் பதவிக்காலத்தின் இறுதியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு வந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம் அவர், இம்முறையுள்ள தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஒரு சட்ட பிரச்சினையை முன்னாள் பிரதம நீதியரசர் கிளப்பியிருக்கின்றார்.

அவரது கருத்தை ஆராய்ந்து பார்த்தால், சட்டத்தின் பிரகாரம் அது நீதியானதாகவே காணப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாத காலத்தில் 18ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்தும் தற்போது இச்சட்டம் காணப்படுவதன் காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

இருந்தும் இப்படியானதொரு கருத்தை 3 வருடங்களுக்கு பிறகு முன்வைத்ததற்கான காரணம் என்ன என்ற சந்தேகமும் எம்மில் எழுந்துள்ளது.

Related Post