‘ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ – தவிசாளர் அமீர் அலி தெரிவிப்பு!

அமைச்சுப் பொறுப்பை ஏற்க வருமாறு, தமது கட்சிக்கு விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பாக, நேற்று இரவு கூடிய கட்சியின் அதி உயர்பீடம், மேற்படி ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிப்பது என ஏகமனதாக தீர்மானித்ததாக கட்சியின் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
“ஒட்டு மொத்த நாடும் வீதிக்கிறங்கி போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த எமது கட்சி ஒரு போதும் துணைபோகமாட்டாது. மேலும், யாரை மக்கள் வீட்டுக்குச் செல்லுமாறு கூறி வீதிக்கிறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்களோ, அவரின் தலைமையில் மீண்டும் புதிய அமைச்சரவை அமையப் பெறுவது ஒரு கேலிக்கூத்தான விடயமாகும்.
 
இப்போது, நடைபெற்றதாகக் கூறப்படும் அமைச்சரவை பதவித் துறப்பு என்பதும் ஒரு கண்துடைப்பு நாடகமன்றி வேறொன்றுமில்லை.
 
எனவே, மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, அரசு பதவி விலகவேண்டுமே ஒழிய, மக்களை இன்னுமின்னும் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்வதே அரசாங்கத்துக்குள்ள நல்ல தெரிவாகும். இல்லையேல் மக்கள் போராட்டம் அதனைத் தீர்மானிக்கும்.” என்றார்.