ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் சீனாவுக்கு பயணமாகின்றார்.
சீன ஜனாதிபதியின் அழைப்பையேற்று எதிர்வரும் 25 ஆம் திகதி சீனா செல்லவுள்ள ஜனாதிபதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பதுடன் சீன ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் சீனாவில் நடைபெறும் ஆசிய வருடாந்த மாநாட்டிலும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷி. ஜின்பின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள்
கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை சீன விஜயத்தின்போது இலங்கையில் சீனா நிர்மாணித்துவரும் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்துதல் மற்றும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள் குறித்து கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இந்த விஜயத்தின்போது ஆராயப்படவுள்ளது.
சீனா இலங்கையில் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இந்த விஜயத்தின்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
தற்போதைய நிலைமையில் கொழும்பு துறை முக நகர் அபிவிருத்தி திட்டம் தொடர்பில் மீளாய்வுகள் இடம்பெற்றுவருகின்றன. எனினும் அதன் ஒரு பகுதியின் பணிகளை தொடர்வதற்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தின் எதிர்கால நிலைமை மற்றும் ஏனைய சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இந்த விஜயத்தின்போது கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதற் தடவையாக சீனாவுக்கு விஜயம் செய்கின்றார். இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்து ஜனாதிபதியின் விஜயம் தொடர்பாக ஆராய்ந்துவிட்டு வந்திருந்தார்.
இதேவேளை சீனாவில் இடம்பெறும் ஆசிய வருடாந்த மாநாட்டில் சீனா, இலங்கை, ஆர்மேனியா, ஆஸ்திரியா, இந்தோனேஷியா, நேபாளம், உகண்டா, கஸகஸ்தான், மலேஷியா, நெதர்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சீன ஜனாதிபதி தனது விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பியிருந்தார். இலங்கைகக்கு விஜயம் செய்திருந்த லியு ஜின்சாவோ குறிப்பிடுகையில் எந்தவொரு நாட்டுக்கும் எதிரான கருவியாக இலங்கையை சீனா ஒருபோதும் பயன்படுத்தாது. ஒரு நாட்டுக்கு எதிரான கருவியாக இலங்கையை நாங்கள் பயன்படுத்தமாட்டோம். அவ்வாறான தேவையில் நாங்கள் நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ளமாட்டோம். இலங்கை ஏனைய நாடுகளுடன் உறவை பேணி வருகின்றது. இலங்கை இந்தியாவுடன் சிறந்த உறவை பேணுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவுடன் சீனாவுக்கும் சிறந்த தொடர்பு உள்ளது. மேற்கு நாடுகளை போன்று எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களில் சீனா தலையிடும் கொள்கையை கொண்டதில்லை. நாங்கள் அனைத்து நாடுகளிடம் இருந்து கற்றுக்கொண்டுவருகின்றோம். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா இலங்கை போன்ற நாடுகளிடம் இருந்து கற்றுக்கொண்டுவருகின்றோம். எந்தவொரு நாட்டிலும் எங்களுடைய இடம் எத்தகையது என்று எங்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி இந்தோனேஷியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தோனேஷியாவில் இடம்பெறவுள்ள ஆசிய ஆபிரிக்க மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேஷியா செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.vk