தமி்ழ் தேசிய கூட்டமைப்பை இனவாத கட்சியாக பிரகடனம் செய்ய நேரிடும்..உறுப்பினர் நகுசீன் எச்சரிக்கை

 

பாதிக்கப்பட்டமன்னார் மாவட்ட  மக்களுக்கு எதை செய்தாலும்,அதனை இழிவாக நோக்கும் ஒருவராக மன்னார் நகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் குமரேஸ் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மன்னார் நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் நகுசீ்ன்,தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று பிரகடனப்படுத்த வேண்டியேற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் அதாவுல்லா அவர்களை மன்னாருக்கு அழைத்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்,மன்னார் மாவட்டத்தில் நவீன முறையில் புனரமைப்பு செய்யப்பட்ட பாதைகளை திறந்து வைக்கும் நிகழ்வினை நடத்தினார்.இந்த திறப்பு விழாவினையடுத்து கூட்டமைப்பு உறுப்பினர் குமரேஸ் என்பவர் இந்த நிகழ்வினை இழிவாக பேசியுள்ளதுடன்,சில தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினையும் வெளியிட்டிருந்தார்.
இது குறித்து நகர சபை உறுப்பினர் நகுசீன் செய்தியினை வெளியிட்டிருந்த ஊடக நிறுவனத்தின் தலைமன்னார்,மன்னார் செய்தியாளர்களிடம் வினவிய போது-
இந்த செய்தியினை ஊடகத்தில் பார்த்ததும்,எமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு இது பிழையான செய்தி என்றும் தமிழ் கூட்டமைப்பு நகர சபை உறுப்பினரான குமரேஸ் என்பவர் எமது பெயரை பயன்படுத்தி செய்தி அனுப்பியுள்ளதாகவும்,இவ்வாறான செய்திகளை அவர் அனுப்பினால் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளதாக தலைமன்னார் தினக்குரல் நிருபர் லெம்பர்ட் தெரிவித்துள்ளார் என்றும் நகுசீன் குறிப்பிட்டார்.
பல மில்லியன் ரூபாய்கள் செலவில் 8 பாதைகள் புனரமைப்பு செய்யப்பட்டு அவைகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.இந்த பாதைகளின் பெயர்களை பார்த்தால் அனைத்தும் தமிழ் மக்களது கிராமங்களுக்கு செல்லுபவைகாளகத்தான் இருக்கின்றன்.இந்த நிலையில் எமது கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்கள் அனுபவிக்க விடாது,மக்களை பிழையாக வழி நடத்தும் பணிகளில் இவர் ஈடுபடுவதானது வண்மையாக கண்டிக்க கூடியது.

 

அரசாங்கத்தின் அபிவிருத்திகள் தமக்கு தேவையில்லை என்று வாய்க்கிழிய கத்திவரும் உறுப்பினர் குமரேஸ் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் இனவாத போக்கை மன்னார் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் வண்மையாக கண்டிக்கின்றனர்.அண்மையில் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் குறித்து இன ரீதியாக பார்க்கும் குமரேஸ் இனவாதத்தின் உச்ச கட்டத்தில் இருப்பது அவரது பொறுப்பற்ற அறிக்கையில் இருந்து அறிய முடியகின்றது என்றும் மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன்  மேலும் தெரிவித்துள்ளார்.