தம்புள்ளை நகர எல்லைக்குள் அரசாங்கம் கையளிக்க முன்வந்துள்ள 40 பேர்ச் காணியில் புதிய பள்ளிவாசலை நிர்மாணித்து அதனை உங்கள் கரங்களாலேயே திறந்து வையுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை மாத்தளை தியபுபுல ஐக்கிய தேசியக் கட்சியும் எம். ஜி.ஆர். அண்ணாதிராவிட முன்னேற்ற கழகமும் இணைந்து விடுத்துள்ளன.
மாத்தளை தியபுபுல ஐக்கியத் தேசியக் கட்சி கிளையின் தலைவரும் இலங்கை எம்.ஜி.ஆர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் நாம் இலங்கையர் கட்சியின் தலைவருமான எம்.யு.எம். சுஹைர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் 552 மில்லியன் ரூபா செலவில் அம்பாறை அக்கறைப்பற்றில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடுகள் அப்பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பலரால் அபகரிக்கப்பட்டிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான 37ஏக்கர் காணியும் மீண்டும் மையவாடிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்தோடு மையவாடிக்காணியில் 19 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிட நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கு செல்லும் உம்ரா பயணிகளிடமிருந்து உம்ரா முகவர்கள் 75 ஆயிரம் ரூபாவுக்கும், 90 ஆயிரம் ரூபாவுக்கும் இடையிலான கட்டணத்தையே அறவிட வேண்டும். இதேபோன்று ஹஜ் கட்டணம் 4 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். முதன் முறையாக ஹஜ் பயணிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
குறிப்பிட்ட கடிதத்தின் பிரதிகள் அமைச்சர்கள் கபீர் ஹாசிம், சஜித்பிரேமதாச, எம்.எச்.ஏ. ஹலீம், வசந்த அலுவிகார, கருஜயசூரிய, டி.எம்.சுவாமிநாதன், ஜோன் அமரதுங்க மற்றும் ரஞ்ஜித் அலுவிகார, டல்ஜின் அலுவிகார அநுரகுமாரதிசநாயக்க, ஆர். சம்பந்தன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-Vidivelli-