தலைவர் றிஷாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது -சுபைர்

அரசாங்கத்தின் நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர் றிசாத் பதியுதீன் என்றும் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் 100 வது நாள் தொடர்பில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தமதுரையில் –
முன்னால் ஜனாதிபதியின் ஆட்சி மீது மக்கள் கொண்ட வெறுப்புணர்வே ஆட்சி மாற்றத்திற்கான காரணமாகும்.இந்த ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அன்று எவரும் முன்வராத போது தமது முழுமையான மக்கள் பிரதி நிதிகளுடன் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்க சென்றவர் எமது தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை எவரும் மறைத்து பேச முடியாது.
முஸ்லிம்களின் கட்சியாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரட்டை  வேடம் பூண்டு எவ்வித முடிவையும் எடுக்காமல் இருந்த போது துணிந்து முஸ்லிம் மக்களின் நலனை மட்டும் கருத்திற் கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக  இந்த அர்ப்பணத்தை செய்தது.ஆனால் சிலர் இதனை மறந்து இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும்,அதனது தேசிய தலைமையினையும் இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.
இதனை செய்வதற்கு எவருக்கும் நாம் அனுமதியளிக்க முடியாது.எமது தலைமையினை பாதுகாக்க வேண்டும்.இதற்கு எதிராக வரும் சவால்களை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
இன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு,எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மக்களை திசை திருப்பியுள்ளது.இந்த அரசியல் அலையினை கண்டு பயந்து போயுள்ள ஏனைய கட்சிகள் எல்லா பாகங்களிலும் இருந்து  எமது தலைமைத்துவத்தை பழித்தீரக்க புறப்பட்டுள்ளதை இன்று காணமுடிகின்றது.
இந்த நாட்டில் நல்லாட்சியினை ஏற்படுத்த எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்கமாக வழங்கிய ஆதரவினால் தான் இன்று வேறுகட்சிகளை சார்ந்தவர்கள் அமைச்சர்காளகவும்,ஏனைய பதவிகளிலும் இருக்கின்றனர் என்பதை இன்று அவர்கள் மற்நதுவிட்டார்கள் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மேலும் தெரிவித்தார்.