தான் பிரதமராக பதவியேற்றதும் ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் சிரச ஊடகம் வௌியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என, ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அமர்வின் போது, சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமரான தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்பட்டுள்ளதோடு, தனது உரிமை மற்றும் வரப்பிரசாதங்களும் மீறப்பட்டுள்ளதாக பிரதமர் நேற்று முன்தினம் (04) பாராளுமன்றத்தில் கூறினார்.
அதேபோல் துமிந்த சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை பாதுகாக்க தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அண்மையில் சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பான சடன நிகழ்ச்சியில் கூறப்பட்டதாகவும், தான் ஒரு போதும் குற்றவாளிகளைப் பாதுகாக்கவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தன்னிடம் தொலைக்காட்சி அலைவரிசைகள் சில நேர்காணலுக்கு அனுமதி கோரியிருந்ததாகவும், எனினும் சிரச தொலைக்காட்சி அவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறிருக்க ஹிரு தொலைக்காட்சிக்கு தான் வழங்கிய செவ்வி ஒப்பந்தம் காரணமாகவே இடம்பெற்றதாக கூறுவது ஞாயம் இல்லை எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.