Breaking
Fri. Mar 21st, 2025

தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று தாம் கூறவில்லை என  பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள், அவர்கள் தொழிலாளர்கள் அதனால் அவர்களை விடுவித்துவிடுங்கள்,

ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்பதால் அவற்றை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

இவரது கருத்திற்கு பல்வேறு கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதிக்கு கூறவே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்டைத்தான் படிப்பார். நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை. நான் மீனவர்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன். அதனால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை.

இராமேஸ்வரம் மீனவர்கள் என்னை சந்தித்து இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவைக் கொண்டு நான் ராஜபக்ஷவிடம் கொடுத்தேன். அதனை ஏற்று மீனவர்களை அவர் விடுவித்தார்.

ஆனால், மீன்பிடி இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள், படகுகளை மீட்குமாறு என்னிடம் கோரிக்கை விடுவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post