Breaking
Thu. Mar 20th, 2025

சர்வதேச சுகாதாரத்துறை மாநாட்டினை முன்னிட்டு பேராதனை பல்கலைக்கழகத்தினால் ஒரு சுகாதாரம் எனும் தலைப்பிலான மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த சுகாதார மாநாடு ஒரே சுகாதாரம் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.சுகாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற புதிய தீர்வு முறைகள் மற்றும் சர்வதேச சுகாதார சமூகத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற நன்மைகள் போன்றன இங்கு முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக பேராதெனிய பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டி.ரமவன்ச கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.ஒரு சுகாதாரம் என்ற கருத்தானது உலகளாவிய ரீதியில் மூலோபாய கருத்தாக அமைகின்றது. பல்துறைகளிலும் ஒத்துழைப்புக்களை தொடர்வதற்கும் விரிவாக்கம் செய்யவும் சுகாதார ரீதியில் அனைத்து சமூகங்களுக்குமிடையே நல்லதொரு இணக்கப்பாட்டினை மேற்கொள்ளவும் மனிதன் விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கிடையில் சமத்துவ உணர்வை தோற்றுவிப்பதுவுமே இதன் பிரதான நோக்கமாகுமென பேராசிரியர் எம்.டி.ரமவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.சர்வதேச ரீதியில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், பல்வகைத்திறமைகள், என்பவற்றினை தீர்க்கமாக கலந்துரையாடுவதற்கென 50 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்கள், உள்ளூர் வெளியூர் மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.குறிப்பிடத்தக்க பேச்சாளர்களாக, ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஜிரோ அரிகாவா, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பட்ரிகா கொன்ராட், லண்டன் பேராசிரியர் கலாநிதி போல் டார்கன்,  அவுஸ்ரேலியாவை சேர்ந்த பேராசிரியர் அன்ட்ரூ டவ்சன்,  எனப்பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தெற்காசிய மருத்துவ தொழிநுட்பம் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மையம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் மில்கோ ஆகியன ஒன்றிணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளன.

Related Post