Breaking
Fri. Jun 20th, 2025

தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடிவடைந்து பொதுத்தேர்தல் நடக்கும் வரையிலேயே நாம் அமைதியாக உள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் முறைமையில் மாற்றம் அவசியமெனவும் வலியுறுத்தினார்.

தேசிய அரசாங்கம் அமையப் பெற்றதன் பின்னர் புதிய எதிர்க்கட்சி மெளனம் காப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாம் எதிர்க்கட்சி என்ற நிரந்தர பதவியினை வகிக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடிவடையும் வரையிலேயே நாம் எதிர்க்கட்சி என்ற நிலையில் உள்ளோம். இவர்களின் தேசிய அரசாங்கம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும். அப்போது மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தினையே பெறும். அது வரையிலேயே நாம் பொறுமையாக உள்ளோம். தற்போதைய அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆவார்.

அவரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இதில் ஐக்கிய தேசியக் கட்சியே பங்காளிகளாவர். எனவே அவர்கள்தான் அடுத்த தடவையும் பாராளுமன்றின் எதிர்க்கட்சியாக மாறப்போகின்றனர். எனவே நாம் முழு நேர எதிர்க்கட்சியில்லை. பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினர் 49 ஆசனங்களுடன் தான் பிரதமர் பதவியையும் அமைச்சுப் பதவியையும் கொண்டு கட்சி நடத்துகின்றனர். எனவே அடுத்த பொதுத்தேர்தலில் நிலைமைகள் மாற்றமடைந்து புதிய தலைமைத் துவத்துடனான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழமையான ஆட்சியினை நடத்தும்.

மேலும் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடைபெற வேண்டும். எனவே அடுத்த தேர்தலானது தேர்தல் முறைமையில் மாற்றத்துடனேயே இடம்பெற வேண்டும். இல்லையேல் நாம் அதற்கு முழுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். வெறுமனே அரசியல் அமைப்பினை மாற்றி 17ஆவது திருத்தத்தினை மட்டும் அமுல்படுத்துவதால் மாற்றம் எதுவும் இடம்பெறப்போவதில்லை. தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு கட்சி அரசியல் முறைமையினை சரியாக நடத்தக்கூடிய வகையில் தேர்தலை நடத்த வேண்டும். எனவே எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது முழுமையான ஆதிக்கத்தினை வெளிப்படுத்தும்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சில பின்னடைவுகளை எதிர் கொண்டி ருந்தாலும் கட்சியின் ஒற்றுமையும் மக்கள் கட்சியின் மீது கொண்டுள்ள பற்றும் குறைவடையவில்லை. தலைமைத்துவத் தினை மாற்றியமைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கட்சியினை விட்டு வெளியேறினார்களே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிதறடிக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. அடுத்த பொதுத் தேர்தலில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Related Post